ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு டி.ஜி.பி ஜாங்கிட் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக போக்குவரத்துத் துறை ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராகவும் டி.ஜி.பி-யாகவும் செயல்பட்டு வருகிறார் ஜாங்கிட். இவர் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், “தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரிடமிருந்து, ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்திற்கு பல்வேறு முறையீடுகள் வந்திருக்கின்றன. நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேவையாள அளவு இருந்தும், முக்கியப் பதவிகள், பதவி உயர்வு மூலம் ஐ.பி.எஸ் அதிகாரியாகும் நபர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.
இதனால், நேரடியாக ஐ.பி.எஸ் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் அதிகாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் போதுமான அளவு ஐ.பி.எஸ் அதிகாரிகள் இல்லாத சூழலில் மட்டுமே, பதவி உயர்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும். எனவே ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் சட்ட விதிகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறேன். இதனை அமல் படுத்தத் தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கைகளை அணுக வேண்டிய நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.