கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிசியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், அமைச்சர்கள், எ.வ. வேலு, மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவது தொடர்பாக சோதனை நடத்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் வியாழக்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், விஷச் சாராயம் விற்பவர்கள் குறித்த பட்டியல் எடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தொடர்புடையவரகள் மீது உடனடியாக வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி சங்கர் ஜிவால் மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகளுக்கு அதிரடி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. செந்தில் குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“