சென்னை மெரினா கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை, டிஜிபி சைலேந்திர பாபு தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு, சிறுவனின் உறவினர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று மாலை 5.30 மணியளவில் மெரினா கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்திருந்த சிறுவன் கடலில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, சிறுவன் திடீரென கடல் அலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தான். இதையடுத்து, கடற்கரையில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
கடல் அலையில் சிக்கியதால், அந்த சிறுவன் மூர்ச்சையற்று கிடந்துள்ளான். அந்த நேரத்தில், அந்த வழியாக நடை பயிற்சி மேற்கொண்டிருந்த டிஜிபி சைலேந்திரபாபு, அங்கே சிறுவன் மூர்ச்சையற்று கிடப்பதைப் பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக சிறுவனுக்கு முதலுதவி அளித்தார்.
அதோடு, கடற்கரையில் செல்லும் ரோந்து வாகனத்தை உடனடியாக வரவழைத்து, அதன் மூலம் சிறுவனை சிகிச்சைக்காக அங்கே வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது சிறுவன் நலமாக இருக்கிறான். தற்போது, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு தக்க சமயத்தில் முதலுதவி அளித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சிறுவனின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். சிறுவனுக்கு முதலுதவி அளித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”