நாடு முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையில் பி.எஃப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்தச் சம்பவங்கள் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி தலைவர்களின் வீடுகளை குறிவைத்து நடத்தப்பட்டது. பொள்ளாச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகளின் ஆட்டோ மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் எந்த உயிருக்கும் ஆபத்து இல்லை.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து போலீசார் கோவையின் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட சமீரன் மற்றும் சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன், “குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் பிடித்துவிடுவோம்” என்றனர்.
மேலும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளுடன் மாநில செயலளர் இறையன்பும் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், “டிஜிபி சைலேந்திர பாபு வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மண்ணெண்ணெய் பாட்டில் வீசியவர்களில் சில குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1410 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil