கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில், 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதி கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, வீடியோ பதிவு அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வோம் என்று காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 13 ஆம் தேதி அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் மாணவியின் மரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 17) 4வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக சுமார் 100 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது, போராட்டக்காரர்களின் கூட்டம் அதிகரித்ததால், பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பஸ்களுக்கு தீ வைத்தனர். கல் வீசி தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமல்லாமல், காவல் வாகனங்கள் மீதும் காவலர்கள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டதால், இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர். போலீசார் போராட்டக்காரர்களைக் கலைக்க தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் தொடர்ந்து திரண்டு வந்ததால், போலீசார் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
போராட்டக்காரரகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க அதிரடிப்படை போலீசாரை வரவழைத்தனர். ஆனால், அதிரடிப்படை போலீசார் வாகனத்தை மறித்த போராட்டக்காரர்கள், வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, வீடியோ பதிவு அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வோம் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது: “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூர் பள்ளி மாணவி இறந்தது சம்பந்தமாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு முறையான விசாரணை நடந்து வருகிறது. அது சம்பந்தப்பட்ட எல்லா நபர்களும் விசாரிக்கபட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி தலைமையில், இந்த புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது, இன்று போராட்டம் என்கிற பெயரில் வந்த நபர்கள், பள்ளிக்கூடத்தை தாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதை காவல்துறை அதிகாரிகள் தடுத்திருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்காக டிஐஜி தலைமையில், 2 எஸ்.பி.க்கள், 95 காவலர்கள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். அதையும் மீறி இவர்கள் பள்ளிக்கூடத்தின் மீதும் காவல் வாகனத்தின் மீதும், காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இப்போது அதிகமான காவல்துறையினர் கிட்டத்தட்ட 500 பேர் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார்கள். கூடுதல் காவல்துறை இயக்குநர் தாமரைக்கண்ணன் தலைமையில், ஒரு போலீஸ் படை அங்கே விரைந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நேரத்தில் இந்த பிரச்னை கட்டுக்குள் வரும். புலன் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கும்போது, எந்த காரணமும் இல்லாமல், அங்கே ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டதைக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். இன்றைய தினமே நடவடிக்கை எடுப்போம். வீடியோ பதிவுகளை வைத்து காலப்போக்கில் அவர்களை கைது செய்வோம்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.