தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையரங்குகளில் வெளியிடுவதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சர்சையாகி உள்ள நிலையில், அந்த படம் தமிழகத்தில் திரையிடுவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடுவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரளா உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ‘தி கேரளா ஸ்டோரி’ தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திர பாபு (மே 4) வியாழக்கிழமை மாலை காவல்துறையினருக்கு பிறப்பித்த உத்தரவில், “தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை (மே 5) வெளியாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். திரை அரங்குகளில் பார்வையாளர்களை முழுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் சட்ட ஒழுங்கை பாதிக்கும் கருத்துகள் வெளியிட்டால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"