கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்டு விரைவாக துப்பு துலக்கிய ஆய்வாளர், ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட 15 பேருக்கு தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு ரூ.7000 மற்றும் சான்றிதழ் அளித்துப் பாராட்டினார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேட்டில் அக்டோபர் 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் வெடித்து சிதறியது. அப்போது அங்கே இரும்பு பால்ஸ் மற்றும் ஆணிகளும் சிதறி இருந்ததால் சந்தேகத்தை எழுப்பியது.
இந்த சம்பவத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க காவல்துறை 5 தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, விரைந்து விசாரணை நடத்திய போலீசார், கார் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவர் ஜமேஷா முபின் என அடையாளம் காணப்பட்டார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யார், கார் பற்றிய விவரங்கள், அவருடன் தொடர்புடையவர்களை 12 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் விரைவாகத் துப்பு துலக்கி கண்டறிந்தனர்.
இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் விரைவாக துப்பு துலக்கிய போலீசாரை தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு விரைவாக துப்பு துலக்கிய ஆய்வாளர், ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட 15 பேருக்கு தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு ரூ.7000 மற்றும் சான்றிதழ் அளித்துப் பாராட்டினார்.
அதன்படி, இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி (உளவுப்பிரிவு), சிவக்குமார் (உளவுப்பிரிவு), செந்தில்குமார் (சரவணம்பட்டி காவல் நிலையம்), அருண் (சைபர் கிரைம்), முருகன் (கோமங்கலம் காவல் நிலையம்), உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம் (உளவுத்துறை), கார்த்திகேயன் (சிங்காநல்லூர் காவல் நிலையம்), ஆனந்தராஜன் (குன்னூர் காவல் நிலையம்), சோமசுந்தரம் (கொலக்கம்பை காவல் நிலையம்), தலைமைக் காவலர்கள் செந்தில் (உளவுத்துறை), செந்தில்குமார் (பீளமேடு காவல் நிலையம்), பாலபிரகாசம்( பீளமேடு காவல் நிலையம்), பிரகாஷ் (சரவணம்பட்டி), காவலர் தனராஜ் (சிறப்புப் பிரிவு), புகைப்படக் கலைஞர் பிரசாத் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ், ரொக்கத் தொகையை டி.ஜி.பி சைலேந்திரபாபு வழங்கினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"