நடிகர் தனுஷூக்கு தலை இருக்காது – கொலைமிரட்டலால் பரபரப்பு
Death threat to Dhanush : மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.இதனால், பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By: WebDesk
Updated: February 21, 2020, 12:01:20 PM
dhanush, death threat, asuran , mari selvaraj, karnan, pariyerum perumal, south districts, nellai, thoothukudi, karunas, mukkulathor puli padai, whatsapp video
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.இதனால், பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசுரன் என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் கிராமத்து கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்போது பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டுவர முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் குறிப்பிட்ட ஜாதியினரை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் நடக்கும் சாதி பிரச்சனைகளை கதையாக்கி படமாக வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வாட்ஸ் அப் வீடியோ ஒன்றில் தனுசுக்கு ஒரு இளைஞர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர், எங்கள் ஜாதியை பற்றி படம் எடுத்தால் உன் தலையை வெட்டி விடுவேன் எனவும், எங்கள் ஜாதியினர் உங்களை கொலை செய்து விடுவார்கள் எனவும் சவால் விட்டுள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருணாஸ் கட்சி எதிர்ப்பு : கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பாக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்ப்பட்டுள்ளது.