தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை குறித்து கருத்து கூறிய மு.க.ஸ்டாலின், அதை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா? என்பதை தெளிவாக கூறவில்லை.
தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு, 3 மாணவிகள் உயிருடன் கொளுத்தப்பட்ட நிகழ்வுகள் தமிழ்நாடு வரலாற்றுத் தடத்தில் ஒரு ஆறாத வடு! கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000-மாவது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அதிமுக.வினர் போராட்டம் நடத்தினர். அன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் ஒரு பேருந்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்திருந்தனர். அந்த பஸ்ஸை தர்மபுரி இலக்கியம்பட்டியில் அதிமுக.வினர் வழிமறித்து தீ வைத்தனர்.
இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பலியானார்கள். இந்த வழக்கில் முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகிய அதிமுக.வினருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகளான அதிமுகவைச் சேர்ந்த மூவரை ஆளுநரிடம் உள்ள நெருக்கம் - உறவை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது அ.தி.மு.க அரசு.
ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்?— M.K.Stalin (@mkstalin) 19 November 2018
உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனையாக குறைத்தது. இவர்களை நன்னடத்தை அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்தது. தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இதற்கு ஒப்புதல் கொடுத்தார். அவர்கள் மூவரை நேற்று வேலூர் சிறையில் இருந்து விடுவித்தனர்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகளான அதிமுகவைச் சேர்ந்த மூவரை ஆளுநரிடம் உள்ள நெருக்கம் - உறவை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது அ.தி.மு.க அரசு.
ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்களை ஏன் விடுவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த மூவரை விடுவித்ததை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய திமுக ஆட்சியில் மதுரை மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதான திமுக.வினரும் இதே போன்று விடுதலை செய்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த வழக்கில் அதிமுக.வினர் விடுதலையை திமுக எதிர்க்கவில்லை என கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.