தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: அதிமுகவினர் மூன்று பேரும் விடுதலை

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை இலக்கியம் பட்டியைச் சேர்ந்த விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்துக்கு, தருமபுரி அருகே அதிமுகவினர் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் தீயில் கருகி பலியாயினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மூவரும் கருணை மனு தாக்கல் செய்ய, அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தற்போது எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நன்னடத்தை விதியின் படி, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கலாம் என்ற அடிப்படையிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தற்போது வேலூர் சிறையில் உள்ள ரவீந்திரன், நெடுஞ்செழியன் மற்றும் முனியப்பன் ஆளுநரின் ஒப்புதலோடு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close