பா.ம.க-வின் கவுரவ யுத்தம்: சவுமியா அன்புமணிக்கு சாதக- பாதகங்கள் என்ன?

தருமபுரி தொகுதியில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவதால், இந்த தேர்தல் அக்கட்சிக்கு ஒரு கவுரவ யுத்தமாகப் பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Soumiya Anbumani

இந்த தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவதன் மூலம் தருமபுரி தொகுதி கவனம் பெற்றுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும் மிக முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பா.ஜ.க தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீவிரமாக உள்ளன. அ.தி.மு.க இந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே போல, இந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியில், இடம்பெற்றுள்ள பா.ம.க-வுக்கு கவுரவ யுத்தமாக அமைந்துள்ளது. 

Advertisment

தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரி மக்களவைத் தொகுதியில் இந்த தேர்தலில் பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவதன் மூலம் கவனம் பெற்றுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தருமபுரி தொகுதியில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவதால், இந்த தேர்தல் அக்கட்சிக்கு ஒரு கவுரவ யுத்தமாகப் பார்க்கப்படுகிறது. தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணிக்கு சாதகங்கள், பாதகங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

தருமபுரி மக்களவைத் தொகுதி பா.ம.க ஆதரவுத் தளமான வன்னியர்கள் செறிவாக வசிக்கும் பகுதி என்பதால், அக்கட்சி செல்வாக்கு மிக்க தொகுதியாகவே இருந்து வந்துள்ளது. 1989-ம் ஆண்டு தேர்தல் முதலே பா.ம.க இங்கே ஒரு வங்கியைக் காட்டி வருகிறது. தருமபுரி தொகுதியில் பா.ம.க-வைச் சேர்ந்த பாரிமோகன், பு.த. இளங்கோவன், செந்தில் என பலர் இங்கு எம்.பி.யாக இருந்துள்ளனர். மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வாகி மக்களவைக்கு சென்ற வரலாறு தருமபுரி தொகுதிக்கு உள்ளது.

Advertisment
Advertisements

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தருமபுரி ஆகிய 2 தொகுதிகளைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு அ.தி.மு.க-வை வீழ்த்தி எம்.பி ஆனார். அன்புமணி ராமதாஸின் வெற்றி அன்றைக்கு மிகப் பெரிய கவனத்தைப் பெற்றது.

அதற்கு பிறகு வந்த, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,  அன்புமணி ராமதாஸ் பா.ம.க-வால் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் பா.ம.க ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தி.மு.க வேட்பாலர் செந்தில்குமாரிடம் தோல்வியடைந்து 2-வது இடத்தைப் பிடித்தார். தற்போது, அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

இந்த 2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க-வுக்கு ஆரணி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்ததால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

தருமபுரி தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதும், வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பா.ம.க சார்பில் முதலில் அரசாங்கம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே, வேட்பாளர் மாற்றப்பட்டு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

சவுமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே தருமபுரி நட்சத்திர அந்தஸ்து தொகுதியாக மாறிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலிலும் சவுமியா அன்புமணி ராமதாஸ் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போல, தனது மனைவியை சவுமியாவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். சவுமியாவின் மகளும் தருமபுரி தொகுதிக்கு சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். சவுமியா பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் இடையே அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தருமபுரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க வெற்றி பெற்றதால், இந்த தேர்தலில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பா.ம.க-வினர் இடையே எழுந்துள்ளது. தி.மு.க - அ.தி.மு.க - பா.ம.க என மும்முனைப் போட்டி நிலவுவதால் கடும் போட்டி நிலவும் என்றும் கணிக்கப்படுகிறது. பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனராக செயல்பட்டு வந்த சவுமியா அன்புமணி, முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுவதால், பா.ம.க-வுக்கு இந்த தேர்தல் ஒரு கவுரவ யுத்தமாக மாறியுள்ளது. இதனால், அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் பா.ம.க-வுக்கு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் ஆ. மணி, 2019-இல் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். அவர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கியுள்லார். மத்திய பா.ஜ.க அரசின் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற விவகாரங்களைக் கூறி பா.ஜ.க-வையும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்கும் பா.ம.க-வையும் விமர்சித்து வருகிறார். அ.தி.மு.க வேட்பாளர் அசோக், எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதே நேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பா.ம.க, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது எப்படி சரியாகும் என்ற விமர்சனங்களும் பா.ம.க-வை நோக்கி வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி, பா.ம.க-வின் கவுரவ யுத்தமாகப் பார்க்கப்படும், சவுமியா அன்புமணி போட்டியிடும் தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் நிலவரம் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் நிறைந்த கலவையான தொகுதியாக உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: