தருமபுரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 2 பெண்கள் மரணம்
தருமபுரி அருகே பட்டாசு குடோன் தீ விபத்தில் 2 பெண்கள் மரணம்; பலத்த காயம் அடைந்த சிவசக்தி என்ற பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவர் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (வியாழன்) காலை எதிர்பாராத விதமாக குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் குடோனில் இருந்த பட்டாசுகள் பலத்த ஓசை மற்றும் அதிர்வுடன் வெடித்துச் சிதறின.
இதில் குடோன் முழுமையாக சேதமடைந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், பட்டாசு குடோனில் வேலை செய்துகொண்டிருந்த பழனியம்மாள் (70), முனியம்மாள் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிவசக்தி என்ற பெண் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisment
Advertisement
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். மேலும், விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil