பென்னாகரம் அருகே அஞ்சேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அவர்கள் தங்களை காசு கொடுத்து மனு கொடுக்கச் சொன்னதாக வீடியோ வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது, பென்னாகரம் தாலுகா அஞ்சேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பகுதியில் டாஸ்மாக மதுபானக் கடை அமைக்கக் கோரி மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில், அதிகாரிகளிடம் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆதனூர், தெத்தம்பட்டி, அரங்காபுரம், பளிஞ்சரஅள்ளி, நலப்புரம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, மாங்கரை, நல்லாம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆதனூரில் டாஸ்மாக் செயல்பட்டு வந்தது.
நெடுஞ்சாலையில் செயல்பட்டதால் அகற்றப்பட்டது. இதனால், எங்கள் ஊரில் வசிப்பவர்கள், மது வாங்க தருமபுரிக்கு 24 கி.மீ. தூரத்திற்கும், ஜக்கம்பட்டிக்கு 20 கி.மீ. தூரத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு தொலைதூரம் சென்று மது அருந்தி விட்டு வரும் போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே, எங்கள் ஊரிலேயே டாஸ்மாக் கடை இருந்தால் இது தடுக்கப்படும். எனவே, அஞ்சேஅள்ளி ஊராட்சி பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
அதுமட்டுமில்லாமல், சிலர் அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அரங்காபுரத்தில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என மனு கொடுத்து செய்தித் தொலைக்காட்சிகளில் சேனல்களுக்கு, பேட்டி கொடுத்திருந்தனர்.
தமிழ்நாட்டில் இதுவரை எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானைக் கடை எங்களுக்கு தொந்தரவாக உள்ளது, அதனால், பாதிக்கப்படுகிறோம், அதனால், டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றுங்கள் எனக் கோரி மனு கொடுத்த செய்திகள், போராட்டம் நடத்திய செய்தியகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதல் முறையாக எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி மனு கொடுத்தது தொடர்பாக அந்த ஊரில் உள்ள பிற பொதுமக்களும், பெண்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், “ஊரில் இருந்த, விவரம் தெரியாத, முதியவர்களை, திட்டமிட்டு, பணம் தருவதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை அமைக்க, ஒரு நபர் இடம் வழங்கி உள்ளார். ஆனால், பொதுமக்கள் நாங்கள் அதை வேண்டாம் என தடுத்து வருகிறோம்.” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு சில மது பிரியர்களும் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அது முழுக்க முழுக்க, திட்டமிட்டு, பொதுமக்களை 300 ரூபாய் பணம் தருவதாக கூறி அழைத்துச் சென்று டாஸ்மாக் கடை வேண்டும் எனக் கோரி மனு அளிக்கச் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மூதாட்டி ஒருவர் தங்களுக்கு 300 ரூபாய் பணம் கொடுத்து அழைத்துச் சென்று டாஸ்மாக் கடை வேண்டும் என சொல்லக் கூறியதாக தெரிவிக்கிறார்.
அதாவது, தருமபுரியில் அஞ்சே அள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சில முதியவர்களை பணம் கொடுத்து அழைத்து சென்ற முக்கியப் புள்ளி ஒருவர், அவர்களிடம் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“