தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்ஷா) மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
இந்த நிதியை பெற மத்திய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். இதற்கிடையே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை.
அதேநேரம், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு உட்பட சில கோரிக்கைகளை தமிழகம் முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டதால் இந்த திட்டத்தில் தமிழகம் சேரவில்லை.
இதனால் கடந்த கல்வியாண்டில் (2023-24) 4-வது தவணை நிதியுதவியும், நடப்பு கல்வியாண்டில் (2024-25) முதல் தவணை நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால் மாநில அரசின் பங்களிப்பை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது.
எனவே பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தி இந்து நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, ‘புதிய தேசிய கல்வி கொள்கைக்கு தலைவணங்க மறுப்பதற்காக, கல்வியில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதா? முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்’, என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா? என்று ஸ்டாலினுக்கு 4 கேள்விகளை முன் வைத்திருந்தார்.
அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் தனது X பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், ‘தமிழ் மொழி எங்களின் அடையாளம். 1930 - 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்களே அதற்கு சான்று. எங்களின் அடையாளமான தமிழை தாங்கிப்பிடித்து, ஆங்கில திறனையும் எதிர்கால தலைமுறையினருக்கு தடையின்றி வழங்கி வருகிறோம்.
தமிழை முதன்மை மொழியாக கொண்டு, ஆங்கிலத்திறனை மாணவர்களிடையே அதிகரிக்கும் வகையிலும் தான் எங்கள் கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியையும் உள்ளடக்கி, மக்களுக்கு அந்நியமற்ற வகையில் தேர்வுகள் நடத்திட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.
பொறியியல், மருத்துவம் என முன்னணி கல்வி சார்ந்த புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன.
தமிழ்நாடு அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, தமிழ்ப்புதல்வன், எண்ணும் எழ்த்தும் ஆகியவை, தேசிய கல்விக்கொள்கையின் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றன.
இவ்வாறு, தேசிய கல்விக்கொள்கையில் முன்மொழிகிற ஆக்க செயல்கள் பலவற்றை, ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனினும், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட வரையறைகள் எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்பதால் தேசிய கல்விக்கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க தயாராக இல்லை.
எனவே, சமக்ரா சிக்ஷா (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிதி வழங்கலை தாமதிக்காமல், கட்டுப்பாடுகளின்றி உடனடியாக தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“