/indian-express-tamil/media/media_files/2025/03/10/gqPjGCAehNZNiRt6E1KB.jpg)
"கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது . திட்டத்தை ஏற்க ஒப்புக் கொண்டு விட்டு சூப்பர் முதல்வரின் ஆலோசனையில் பின்வாங்கியது" என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை விவகாரம் குறித்துப் பேசும்போது கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்பிக்கள நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யார் அந்த சூப்பர் முதலமைச்சர்?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தை தி.மு.க எம்பிக்கள் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதைக் கனிமொழி எம்.பி சொல்ல வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களைத் தமிழக அரசு தவறாக வழிநடத்துகிறது என்றும் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Tamil Nadu govt took U-turn’: Dharmendra Pradhan hits out at Stalin-led DMK govt amid NEP debate in Parliament
மேலும், "பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணைய விருப்பம் தெரிவித்தது, கடைசியில் யூடர்ன் அடித்துவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது . திட்டத்தை ஏற்க ஒப்புக் கொண்டு விட்டு சூப்பர் முதல்வரின் ஆலோசனையில் பின்வாங்கியது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது" என்றும் அவர் கூறினார். இது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாடாளுமன்றம் சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துநாடாளுமன்ற வளாகத்திலும் தி.மு.க எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், அப்போதும் தி.மு.க எம்பிக்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.
கனிமொழி காட்டம்
அப்போது பேசிய கனிமொழி எம்.பி. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது, மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக தமிழக எம்.பி,க்கள் ஒருபோது கூறியதில்லை என்றார். தமிழ்நாடு எம்.பி.க்களையும், தமிழ்நாடு மக்களையும் நாகரீகமற்றவர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது புண்படுத்துகிறது என்றும் கனிமொழி கூறினார்.
மத்திய அரசின் கொள்கையை ஏற்காததற்காக மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது என்றும் தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.
திரும்பப் பெற்ற பிரதான்
இதனையடுத்து, தி.மு.க அரசு குறித்த பேச்சை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார். நாகரீகமற்றவர்கள் எனப் பேசியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர் மக்களவையில் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.