பி.எம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தது உண்மை தான் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நேற்று, தி.மு.க எம்.பி-க்களும், மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினும், பி.எம் ஸ்ரீ பள்ளிகள் அமைப்பதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்ததாக குற்றம் சாட்டினர்.
நாடாளுமன்றத்தில் நான் கூறிய தகவலில் உறுதியாக உள்ளேன். இதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் 15 மார்ச் 2024 தேதியிட்ட ஒப்புதல் கடிதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தி.மு.க எம்.பி-க்களும் மாண்புமிகு முதல்வரும் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி விடலாம். ஆனால், உண்மை எப்படியும் வெளிப்படும். மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி, தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. மொழிப் பிரச்சனையை திசை திருப்பும் உத்தியாகக் கருதுவதும், அவர்களின் வசதிக்கேற்ப உண்மைகளை மறுப்பதும் அவர்களுடைய ஆட்சியை பாதுகாக்க உதவாது.
தேசிய கல்விக் கொள்கை மீது இந்த திடீர் மாற்றம் கொண்ட நிலைப்பாடு ஏன்? இவை அனைத்தும் கண்டிப்பாக தி.மு.க-வின் அரசியல் ஆதாயத்திற்காக தான் இருக்கும். தி.மு.க-வின் இந்த பிற்போக்கு அரசியல், தமிழகம் மற்றும் அதன் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பெரும் கேடு.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று மாண்புமிகு முதல்வரை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டு குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழர்கள் மீது சர்ச்சைக்குரிய விதத்தில் நாடாளுமன்றத்தில் பேசியதன் காரணத்திற்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.