விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, இன்று ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.
கேரளாவிலிருந்து தமிழகம் வந்துள்ள இந்த ரதயாத்திரை மூலம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருகின்றன. மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். பின்னர், வெளிநடப்புச் செய்தனர்.
இந்த நிலையில், தமிழகம் வந்த ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ரதயாத்திரை திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரை ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாகக் கன்னியாகுமரி செல்கிறது. 5 மாநிலங்களில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றது. இந்த யாத்திரையால் எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது எனக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அனைத்து மதத்துக்கும் சம உரிமை உண்டு. தமிழகத்தில் இதைவைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்’ என்று விளக்கம் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ரத யாத்திரை விவகாரத்தில் முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்த தி.மு.க, உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி மற்றும் திமுக உறுப்பினர்கள் சிலர், சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 'ரத யாத்திரை தொடர்பாக அரசு பதிலளித்துவிட்டது; பதிலில் திருப்தி இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. அவையை நடத்த ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்று சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்தார். தி.மு.க உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், ரத யாத்திரைக்கு எதிராக தலைமை செயலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் செய்த தமீமுன் அன்சாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.