தயாநிதி அழகிரி திடீரென திமுக மூத்த நிர்வாகியான துரைமுருகன் மீது ‘அட்டாக்’ நடத்தியிருக்கிறார். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்!
தயாநிதி அழகிரி, திமுக.வின் தென் மண்டல செயலாளராக இருந்த அழகிரியின் மகன். அவரது தந்தை அழகிரி எப்போதுமே பரபரப்பு கருத்துகளுக்கு சொந்தக்காரர். ஆனால் சமீபகாலமாக திமுக தொடர்பான அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தாமல் அமைதி காத்து வருகிறார் அழகிரி.
தயாநிதி அழகிரி, தனது தந்தையின் பொறுப்பை எடுத்துக்கொண்டு இப்போது கருத்து கூற ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதும், வைகோவை விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில் கருத்து கூறினார்.
தயாநிதி அழகிரி நேற்று (டிசம்பர் 25) தனது டிவிட்டர் பதிவில், ‘தி.மு.க வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க வின் முதன்மைச்செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.வின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா!’ என கூறியிருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதும் நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ‘வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது’ என்றார். திமுக.வின் வாக்குகள் ஏன் விழவில்லை? என நிருபர்கள் கேட்டபோது, ‘திமுக வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது’ என்றார். இது குறித்தே தயாநிதி அழகிரி விமர்சனம் செய்திருக்கிறார். துரைமுருகன் பெயரைக் குறிப்பிடுவதை தவிர்த்து, ‘முருகனுக்கு அரோகரா’ என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தயாநிதி அழகிரியின் இந்த விமர்சனம் குறித்து சமூக வலைதளங்களில் திமுக.வினர் காரசாரமாக விவாதித்து வருகிறார்கள். துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவரான ராஜாகுப்பம் முருகானந்தம் தனது முகநூல் பதிவில், ‘எங்கள் மண்ணின் மைந்தர் அண்ணன் துரைமுருகன் அவர்கள், ஆர்.கே.நகரில் தினமும் களத்தில் இருந்தார். அவருக்கு அங்கு நடந்தது என்ன என்று உண்மை நிலை நன்கு தெரியும்.
மாறாக அவர் கட்சிக்கோ தலைவர், தளபதிக்கோ என்றும் துரோகம் செய்தது கிடையாது. மேலும் நம் கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தலைவரின் நிழலாகவும், தளபதிக்கு தோள் கொடுக்கும் தோழன் போல சுழன்று பணியாற்றி வரும் அவரை பற்றி விமர்சனம் செய்வதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.
காரணம் ஆர்.கே.நகர் முடிவை ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இப்போது வரை விமர்சனங்கள் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது அண்ணன் துரைமுருகன் அவர்களை மட்டுமே விமர்சனம் செய்வது ஏற்புடையது இல்லை. மேலும் இப்போது திமுகவில் இல்லாத யாரும் தலைமைக்கு அறிவுரை சொல்வது போல கருத்து செல்ல உரிமை கிடையாது என்றே நினைக்கிறேன்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக எதிர்த்து நின்ற அனைத்து தென்மண்டல வேட்பாளர்களும் அண்ணன் அழகிரி அவர்களை சந்தித்தது இன்றும் தொண்டர்கள் நெஞ்சில் ஆறாத வடுவாக உள்ளது. இன்னும் குறிப்பாக கூறுவது என்றால் 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரையில் தலைவர் கலைஞர் நிறுத்திய வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்களை தோற்கடித்தது யார் ? அதன் பிறகு கழகம் தளபதி தலைமையில் வெற்றி பெறவே பெறாது என்று கூறியது யார் என்று கழக தொண்டர்களுக்கு தெரியும் .
மேலும் ஆர்.கே நகரில் உள்ள கழக தொண்டர்கள் யாரும் திமுக ஆளும் கட்சியாக இருந்த போது பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவில்லை. திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது மட்டும் கட்சியில் இணைந்து தன்னை வளப்படுத்திக் கொள்வதும், எதிர்க் கட்சியாக இருக்கும் போது வசைபாடுவது யார் என்பது ஒட்டுமொத்த தொண்டர்களுக்கும் தெரியும்.’ இவ்வாறு கூறியிருக்கிறார் அவர்.
திமுக.வில் விவாதங்களுக்கு பஞ்சமில்லை.