Advertisment

திம்பம் இரவு நேர போக்குவரத்துத் தடை: தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் முடிவு

ஏற்கனவே வனத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 152 விலங்குகள் உயிரிழந்தன என்று குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விபரங்களில் 24 விலங்குகள் மட்டுமே சாலை விபத்தில் உயிரிழந்தாக கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Dhimbam Night Travel Ban issue

Dhimbam Ghats people demand revoke night travel ban: “கோவையை கர்நாடகாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 958-ல் அடிக்கடி நிகழும் விபத்துகள் காரணமாக 2012 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 152 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. எனவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியே செல்லும் நெடுஞ்சாலை 958-ல் வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யும் பொருட்டு பண்ணாரி அம்மன் கோவில் சோதனைச் சாவடி முதல் காரப்பள்ளம் சோதனைச் சாவடி வரையில் உள்ள 22 கி.மீ பாதையை இரவு நேரத்தில் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்த கூடாது” என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது ஈரோடு நிர்வாகம். 2019ம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவை உடனே பின்பற்றும்படி கடந்த மாதம் 08ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் பிப்ரவரி 10ம் தேதி முதல் இந்த தடை அமலில் உள்ளது.

Advertisment

வாழ்வியல் தேவைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் இந்த திம்பம் சாலைப் போக்குவரத்தை அதிக அளவில் நம்பியிருக்கும் ஊராளி மற்றும் சோளகர் பழங்குடி மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்து குரல் எழுப்பி வருகின்றனர்.

திம்பம் இரவு நேர போக்குவரத்து தடை: காய்கறிகளை குப்பையில் கொட்டும் அவலம்; நஷ்டமடையும் விவசாயிகள்

இரவு நேரத்தில் ஒரு அவசர தேவை என்றாலும் சரியான நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வர முடியாது. சாலைகள் பல கொண்டை ஊசி வளைவுகளை கொண்டிருப்பதால் சாதாரண நேரத்திலேயே இங்கு பயணம் மிகவும் சிரமமானது. நூற்றுக் கணக்கான வாகனங்கள் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதும் சவாலானதாக உள்ளது.

பலரும் தங்களின் விவசாய தேவைகளுக்காகவும், கூலி வேலைக்கு செல்லவும் இந்த பகுதிகளில் செல்லும் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். இரவு நேர தடையால் காலையில் இரு பக்கமும் போக்குவரத்து நெரிசல் சரியாக சில மணி நேரங்கள் ஆகிறது. சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு மலைகிராமங்களுக்கு பேருந்துகள் செல்வதும் சமீபமாக குறைந்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லு பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் வயதானோர் என பலரும் சில கிலோ மீட்டர்கள் நடந்து வந்தே பஸ் ஏறும் நிலைமை உருவாகியுள்ளது.

பழங்குடிகள் கிராம சபைகளில் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

ஜீரஹள்ளியின் சோளகர் தொட்டி, தாளவாடியின் பாலப்படுகை, தலமலை வனச்சரகத்தின் ராமரணை, காளி திம்பம், மாவநத்தம் ஆகிர கிராமங்கள் ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள் ஆகும். இதே வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையே இம்மக்கள் தங்களின் பொது போக்குவரத்து தேவைக்காக கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மருத்துவத் தேவை துவங்கி, வணிகம், விவசாயம் சார்ந்த அனைத்து தேவைகளுக்காகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தமிழக நகரங்களை அணுகவும், சாம்ராஜ்நகர் போன்ற கர்நாடக நகரங்களை அணுகவும் இந்த சாலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல் 10.02.2022 முதல் விதிக்கப்பட்டிருக்கும் வாகன போக்குவரத்திற்கு தடையை நடைமுறைப்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்ட நிர்வாகம். இந்த தடை அமலுக்கு வந்து 3 வாரங்கள் ஆன நிலையில், இரவில் இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நூற்றுக் கணக்கான வாகனங்கள் குவிந்து, சாலைப் போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமூக வன வளத்தினை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கிராம சபாவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே வன உரிமைச் சட்டம் 2006 - ன் படி எங்கள் வனப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து உத்தரவிட ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு எவ்வித சட்ட பூர்வ உரிமையும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவுகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கிராம சபைகளில் 20/02/022 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Night travel ban on Erode Dhimbam Ghat Road
மாவநத்தம் கிராம சபையில் பழங்குடி மக்கள் தீர்மானம் நிறைவேற்றும் காட்சி

புலிகள் காப்பக பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்த பொதுமக்கள்

புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (27/02/022) சத்தியமங்கலம், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூடலூர், பந்திப்பூர், சுல்த்தான் பத்தேரி, முத்தங்கா, குண்டல்பேட்டை, தாளவாடி, ஆசனூர்,
கடம்பூர், சத்தியமங்கலம், தெங்கு மரஹாடா, உதகை, மசின குடி, கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள புலிகள் காப்பக பகுதிகளில் வசித்து வரும் மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வன உரிமைச் செயல் பாட்டாளர் சி.ஆர்.பிஜாய், உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கீதா, நீலகிரி எம்.எஸ்.செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், திம்பம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் யுவ பாரத், தாளவாடி விவசாயிகள் சங்க நிர்வாகி கண்ணையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Night travel ban on Erode Dhimbam Ghat Road
புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பழங்குடி நல செயற்பாட்டாளர்கள்

”வன உரிமைச் சட்டத்திற்கும்,வன விலங்கு பாதுகாப்புச் சட்ட திருத்தத்திற்கும் விரோதமான புலிகள் காப்பக நடவடிக்கைகளை கண்டித்தும், புலிகள் காப்பக பகுதிகளில் போக்குவரத்திற்கு தடை விதிப்பதை கைவிடக்கோரியும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மாநில அரசின் உரிமைகளுக்கு விரோதமாக நடப்பதை கண்டித்தும், வரும் மார்ச் 16ம் தேதி அன்று பெங்களூரு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கூடலூர், மசினகுடி, சுல்த்தான் பத்தேரி (கேரளா), குண்டல்பேட்டை (கர்நாடகா) மற்றும் பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சாம்ராஜ்நகர் (கர்நாடகா), தாளவாடி, ஆசனூர், சத்தியமங்கலம், மற்றும் கன்னியாகுமரி, பர்கூர், திருநெல்வேலி ஆகிய மையங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முரண்பட்ட அறிக்கை

பவானிசாகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல். சுந்தரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் 2012ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாலை விபத்தில் இறந்து போன விலங்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், துணை இயக்குநர் அலுவலக பொதுதகவல் அலுவலர்/கண்காணிப்பாளர் செந்தில் குமார், முன்னாள் எம்.எல்.ஏவின் மனுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்துள்ள பதிலில், இந்த குறிப்பிட்ட காலத்தில் திம்பம் சாலையில் உயிரிழந்த வன விலங்குகளின் எண்ணிக்கை 24 மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை இறந்த விலங்குகளின் எண்ணிக்கை 9 என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் வனத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் 9 ஆண்டு காலத்தில் கோவையை பெங்களூருவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 958-ல் மூன்று சிறுத்தைப் புலிகள் உட்பட 152 விலங்குகள் உயிரிழந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகி வருவதால், எந்த தேவைக்காக, எதன் அடிப்படையில் இந்த இரவு நேர தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment