சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்திற்கு இன்று பகல் 11 மணிக்கு திரளான அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர். சற்று நேரத்தில் டிடிவி ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செந்தமிழன் ஆகியோர் அங்கு வந்தனர்.
ஜெயலலிதாவுக்கு சாங்கிய முறைப்படி பூஜைகள் நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரிடம் அவர்கள் முறையிட்டனர். ஆனால் போலீஸ் அவர்களை விடவில்லை. அண்மையில் வருமான வரித்துறை ரெய்டின் போது, அந்த இல்லம் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லை என அமைச்சர்கள் கூறினர். எனவே எங்களை அனுமதிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? என வெற்றிவேல் விவாதம் செய்தார்.
ஆனால், தொடர்ந்து போலீசார் அனுமதி தர மறுத்ததால், வாக்குவாதம் செய்த பின் அவர்களை அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், "போயஸ்கார்டனில் வருமான வரித்துறையினர் இரண்டு அறைகளுக்கு மட்டும் சீல் வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு திதி கொடுக்கக் கூட போலீசார்கள் அனுமதி அளிக்கவில்லை. திதி கொடுக்கச் சென்ற சாஸ்திரிகளை கூட போலீசார் தடுத்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் தான் கார்டனுக்குள் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேவையில்லாமல் கைதாக வேண்டாம் என அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். நான் சொன்னதால், அவர்கள் அந்த இடத்தை விட்டு வந்துவிட்டனர். அம்மாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது" என்றார்.
எம்.பி. மைத்ரேயனின் கருத்துகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமலேயே தினகரன் சென்றுவிட்டார்.