அம்மா அணி என்கிற பெயரில் செயல்பட்டு வந்த திவாகரன், அணியை 'அண்ணா திராவிடர் கழகம்' எனத் தனி கட்சியாக அறிவித்து, அதற்கான கொடியையும் இன்று மன்னார்குடியில் அறிமுகம் செய்தார்.
ஆரம்பம் முதல் தினகரனுக்கும், சசிகலா சகோதரர் திவாகரனுக்கும் பூசல் இருந்து வந்தது. இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில் இந்த பூசல் குறித்து நன்கு தெரிந்து இருந்தாலும், வெளியிலும் அவ்வப் போது இதனை உணர முடிந்தது. சமீபத்தில் நடந்த மா.நடராஜன் படத் திறப்பு விழாவில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர். ஆனால், இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அதன்பிறகு, இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், கடந்த மே மாதம் திவாகரன் மன்னார்குடியில் தனிக்கட்சியையும் அதற்கான அலுவலகத்தையும் திறந்தார். திவாகரனின் இந்த செயல் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரியவந்தது. திவாகரன் கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. இதைத்தொடர்ந்து 'சசிகலா இனி என் சகோதரி இல்லை' என திவாகரன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், இன்று மன்னார்குடியில் அம்மா அணி இனிமேல் 'அண்ணா திராவிடர் கழகம்' என்ற பெயரில் தனிக்கட்சியாக செயல்படும் என அறிவித்ததோடு அதற்கான கொடியையும் திவாகரன் ஏற்றி வைத்தார். அந்த கொடியில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.
பிறகு, மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்த திவாகரன், "கொடியில் உள்ள நிறமான சிகப்பு மனிதனின் ரத்தத்தால் அனைவரும் சமம் எனக் குறிப்பதோடு மனிதனின் வலிமையைக் குறிக்கிறது. வெள்ளை சமாதானம் மற்றும் அறிவைக் குறிக்கிறது. கொடியின் நடுவே உள்ள ஸ்டார், துருவநட்சத்திரம் போல் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் நினைவில் வரும் திராவிட தலைவர்களைக் குறிப்பதாகும். எங்கள் கட்சியில் திருநங்கைகளுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு மாநிலம் முழுவதும் பொறுப்புகள் கொடுக்கப்படும். இது, அகில இந்திய அளவில் எந்தக் கட்சியிலும் இல்லாத ஒன்று. மேலும் சுற்று சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவோம்” எனத் திவாகரன் தெரிவித்தார்.
அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளராக திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.