/indian-express-tamil/media/media_files/2025/05/05/BBBgT5HYxFn38Ld2mLMJ.jpg)
சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் சந்திரசேகரிடம் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகையை மர்ம நபர்கள் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து நகை விற்பனை செய்யும் போது கொள்ளையடித்துச் சென்ற நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வரும் சந்திரசேகர், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடுத்த வைர நகையை விற்பனை செய்ய முயன்றார். இதற்காக ராகுல், ஆரோக்கிய ராஜ், சுபான் ஆகிய மூன்று இடைத்தரகர்களை அணுகினார்.
அவர்கள் லண்டன் ராஜன் என்ற விருதுநகரைச் சேர்ந்த தொழிலதிபர் வைரத்தை வாங்குவதாகக் கூற, சந்திரசேகர் தனது வீட்டில் அவரிடம் 17 கேரட் வைரத்தைக் காட்டினார். வைரத்தின் உண்மைத்தன்மையை அறிந்த லண்டன் ராஜன் அதை 23 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்புக்கொண்டார்.
மே 4ஆம் தேதி பணம் தருவதாகக் கூறிச் சென்றவர், பின்னர் ஆரோக்கிய ராஜ் மூலம் சந்திரசேகரை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வைரத்துடன் வரச்சொன்னார். சந்திரசேகர் தனது மகள் ஜானகி, நண்பர் சுப்பிரமணி மற்றும் ஓட்டுநர் ஆகாஷ் ஆகியோருடன் அங்கு சென்றார்.
மகள் மற்றும் ஓட்டுநரை வெளியே நிறுத்திவிட்டு, நண்பருடன் அறைக்குச் சென்ற சந்திரசேகரை கட்டிப்போட்டு வைரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சந்தேகமடைந்த மகள் ஜானகி அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
கொள்ளையர்கள் தூத்துக்குடியில் இருப்பது தெரியவந்ததும், அங்கு விரைந்த போலீசார் லண்டன் ராஜன், அவரது நண்பர் விஜய், உதவியாளர் அருணாசலம் மற்றும் பாஸ்கர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து வைர நகையை மீட்டனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.