உலக புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் ராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் துணை அமைச்சரின் மகனும் முதலமைச்சரின் பேரணுமான இன்ப நிதி தன்னுடைய நண்பர்கள் உடன் ஜல்லிக்கட்டு போட்டியை காண திடலுக்கு வந்தனர். அப்பொழுது இன்ப நிதியும் அவர் நண்பர்கள் அமர்வதற்காக எழுந்து இடம் தரப்பட்டது.
அப்பொழுது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எழுந்து நின்று கொண்டிருந்த காணொளி காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வந்தது. இணையதளத்தில் பரவியதையொட்டி நெட்டிசன்கள் கல்லூரி படிக்கும் இன்ப நிதி அவர் நண்பர்கள் அமர பெண் ஐஏஎஸ் அதிகாரி நின்று கொண்டிருப்பதா..? இதுதான் சமத்துவமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி பதிவிட்டு கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில், "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம் தெரிவிக்கையில், துணை முதல்வர் இருக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது விதிகளின் படியே மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நானும் எழுந்து நின்றேன். மாறாக சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் திரித்து சொல்லப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.