தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி சந்திப்பை திமுகவினர் மட்டுமல்லாமல் பல தரப்பினரும் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்து காதிருக்கின்றனர். நேற்று கருணாநிதி பிறந்தநாளில், ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பேச்சுகளும் யூகங்களும் எழுந்தது. ஆனால், இருவரும் சந்திக்கவே இல்லை. அதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி சந்திப்பு நடக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னணி காரணம் என்ன என்ற தகவல்களை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, திமுகவில் அவர்களுடைய மகன்கள் மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி இடையே ஏற்பட்ட அரசியல் மோதலில் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைத்து முதலமைச்சராகவும் பதவியேற்று செயல்பட்டுவருகிறார்.
தேர்தலுக்கு முன்புவரை அவ்வப்போது, ஸ்டாலினை விமர்சித்து வந்த அவருடைய அண்ணன் மு.க.அழகிரி தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைதியாக இருந்துவிட்டார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியேற்றபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த அழகிரி முதலமைச்சராக பதவியேற்கும் தனது தம்பியை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறினார். பதவியேற்பு விழாவின்போது மு.க.அழகிரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால் கலந்துகொள்ள முடியாமல் போனது. ஆனால், பதவியேற்பு விழாவில் அவருடைய மகன் துரை தயாநிதி மற்றும் மகள் இருவரும் கலந்துகொண்டனர். உதயநிதி, துரை தயாநிதியை கட்டி அணைத்து வரவேற்றார். அப்போதே, மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இடையேயான மோதல் தணிந்தது என்று பேசப்பட்டது. ஆனாலும், இதுவரை மு.க.அழகிரி திமுகவில் சேர்க்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் சந்திப்பார்கள் விரைவில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய மதுரைக்கு சென்றபோது மு.க.அழகிரியை சந்திப்பார் என்று பேசப்பட்டது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை. அதன்பிறகு, அண்மையில் துரை தயாநிதிக்கு 2வதாக பிறந்த ஆண் குழந்தையின் பெயர் சூட்டுவிழாவில் ஸ்டாலினும் அழகிரியும் சந்திக்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால், அப்போதும் சந்திக்கவில்லை. ஸ்டாலின் பேரப்பிள்ளையை மதுரை சென்று பார்ப்பார் அப்போது சகோதரர்கள் இருவரும் சந்திக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால், அப்போதும் சந்திக்கவில்லை.
இறுதியாக, ஸ்டாலினும் அழகிரியும் இருவரும் ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளில் சந்திப்பு நடக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு ஏற்றாற்போல, மு.க.அழகிரியும் சென்னை வந்திருந்தார். பிரிந்திருந்த சகோதரர்கள் நிச்சயம் சந்திப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதே போல, ஜூன் 3ம் தேதியும் வந்தது அரசியலால் இரு துருவங்களாக பிரிந்திருந்த சகோதர்கள் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் அஞ்சலி செலுத்திவிட்டு தலைமைச் செயலத்துக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், அழகிரி வரவில்லை. மு.க.ஸ்டாலின் போன பிறகு, கோபாலபுரம் இல்லம் வந்த மு.க.அழகிரி தனது தந்தை கருணாநிதி படத்துகு அஞ்சலி செலுத்திவிட்டு தாயாரிடம் பேசிவிட்டு கிளம்பி சென்றார்.
மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ஏன் இருவரும் சந்திக்கவில்லை. மு.க.ஸ்டாலின் சந்திப்பை தவிர்க்கிறாரா? அல்லது இருவருக்கும் இடையே இன்னும் மனக்கசப்பு நீடிக்கிறதா என்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, மு.க.ஸ்டாலின்தான் தனது சகோதரர் அழகிரியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் என்கிறார்கள். ஏனென்று கேட்டபோது, கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல பேர் இறக்கிறார்கள். கொரோனா தொற்று பரவலை ஒழிக்க வேண்டும் என்பதில்
ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறாராம். அரசின் கவனம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் மட்டும்தான் இருக்க வேண்டும். ஊடகங்களும் இதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இந்த சூழலில் அழகிரியை சந்தித்தால், ஊடகங்களின் கவனமும் அரசியல் விவாதமும் இருவரின் சந்திப்பைப் பற்றிதான் இருக்கும். இது இந்த நேரத்தில் தேவையில்லாத சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கும் இதைத் தவிர்ப்பதற்காகவே ஸ்டாலின், மு.க.அழகிரியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். மற்றபடி, எந்த பிரச்னையும் இல்லை. இதை மு.க.அழகிரிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால்தான், கோபாலபுரத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்ற பிறகே முக.அழகிரி அஞ்சலி செலுத்தச் சென்றார் என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.
அதனால், இப்போதைக்கு, மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி சந்திப்பு நடக்காது என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில், அண்ணன் தம்பிகள் இடையே பிரச்னையும் எதுவும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“