scorecardresearch

மௌரியப் பேரரசு தமிழகத்தை ஆண்டதா? அமித்ஷா கூறுவது பொய்: வைகோ

இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, உலகத்தில் அதிகமான முஸ்லிம்கள் வாழுகின்ற நாடு இந்தியா என்பதை, பாஜக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

மௌரியப் பேரரசு தமிழகத்தை ஆண்டதா? அமித்ஷா கூறுவது பொய்: வைகோ
Tamil news updates

550 ஆண்டுகளாக மௌரியப் பேரசு, தமிழ்நாட்டை ஆண்டதாக, அமித்ஷா கூறுவது எந்தவிதமான சான்றுகளும் இல்லாத ஒரு பொய் என வைகோ விமர்சித்துள்ளார்.

கோவையில், ஜூன் 12 அன்று நடந்த மே 17 இயக்க மாநாட்டில் வைகோ ஆற்றிய உரை பின்வருமாறு:

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. இவரை போலத்தான், ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லருக்கு ஆலோசனைகள் சொல்லுகின்ற இடத்தில் கோயபெல்ஸ் இருந்தான்.  அவன் ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளி வீசினான். அவனையும் தாண்டி விட்டார் அமித் ஷா.

தமிழ் இந்து நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கின்றது.

மௌரியப் பேரரசு, ஆப்கானிஸ்தானில் இருந்து இலங்கை வரை, 550 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது என்று அவர் சொல்லி இருக்கின்றார். எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகின்றீர்கள்? என்று நான் அமித் ஷாவைக் கேட்கின்றேன்.

தமிழ்நாட்டு மண்ணில், குப்தர்கள் கால் வைத்தது இல்லை, கனிஷ்கரின் படைகள் வந்தது இல்லை, அக்பர் பாதுஷா, இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தது இல்லை,  ஒளரங்கசீப் படைகள் வந்தது இல்லை.  வடபுலத்தில் இருந்து வேறு எவரும், இந்தத் தமிழகத்தில் கால் வைத்தது கிடையாது.

ஆனால், நாங்கள் கடல் கடந்து சென்று இருக்கின்றோம், வென்று இருக்கின்றோம். கடாரத்தை வென்றோம், ஜாவா, சுமத்ரா, போர்னியோ தீவுகளை வென்றோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எங்களின் புலிக்கொடி பறந்தது.

ஆனால், இந்த நாட்டின் உள்துறை அமைச்சர், 550 ஆண்டுகளாக மௌரியப் பேரசு, தமிழ்நாட்டை ஆண்டதாக, எந்தவிதமான சான்றுகளும் இல்லாத ஒரு பொய்யை, அயோக்கியத்தனமான பொய்யைப் பேசுகின்றார்.

இவரைப் போலத்தான், பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து இந்திய செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா, கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆராதிக்கின்ற இறைத்தூதர், நபிகள் நாயகம் மீது, இழிவும், பழிகள் நிறைந்த, அச்சில் ஏற்ற முடியாத சொற்களால் வசை பாடி இருக்கின்றார்.

அதை, தில்லியில் இருக்கின்ற அஜித் குமார் ஜிண்டால், தன்னுடைய ட்விட்டர் ட்டுரைப் பக்கத்தில் எடுத்துப் பதிவு செய்து பரப்பி இருக்கின்றார்.

அவர்கள் இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. வெளியில்தான் உலவிக்கொண்டு இருக்கின்றார்கள். உலகம் முழுமையும் இருக்கின்ற 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டு அமைப்பு, இந்தியாவைக் கண்டித்து இருக்கின்றன.  இதுவரை இப்படிப்பட்ட கேவலம் நிகழ்ந்தது இல்லை. 

இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, உலகத்தில் அதிகமான முஸ்லிம்கள் வாழுகின்ற நாடு இந்தியா என்பதை, பாஜக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

குற்றம் இழைத்தவர்களைக் கைது செய்யாமல், சிறைக்கு அனுப்பாமல், அதை எதிர்த்துப் போராடுகின்றவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்ற பாசிச வெறி பிடித்த பாரதிய ஜனதா கட்சியை இயக்குகின்ற ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்புகளுக்கு, இந்தக் கூட்டத்தின் வாயிலாகப் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் இவ்வாறு வைகா உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Did the mauryan empire rule tamil nadu amitsha is lying says vaiko