உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா காரணமாக வாரணாசி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், கங்கா - காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகம் திரும்ப இருந்த தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து இன்று காலை வீரர்கள் உதவி கேட்ட நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் வீரர்களை விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
கும்பமேளாவிற்கு செல்லும் மக்களின் கூட்டத்தால் ரயிலில் ஏசி கோச்சில் புக் செய்து வந்தால் கூட அந்த இருக்கைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல தான் மகா கும்பமேளாவில் பங்கேற்க அதிகளவில் பயணிகள் இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியானது வாரணாசியில் நடைபெற்றது. இதில் தென்னிந்தியா அணி சார்பில் தமிழக வீரர்கள் 6 பேர் கலந்துகொண்ட நிலையில் போட்டி முடிந்து இன்று நள்ளிரவு 1 மணியளவில் வாரணாசி ரயில் நிலையம் சென்றுள்ளனர். அப்போது பயங்கர கூட்ட நெரிசல் இருந்துள்ளது.
இதனால் ரயிலில் ஏசி பெட்டியில் புக் செய்து இருந்தும் தமிழக வீரர்களால் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் வாரணாசி ரயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 6 வீரர்கள் உள்பட மொத்தம் 11 பேர் ரயிலில் ஏற முடியாததால் தமிழக அரசிடம் உதவி கேட்டனர்.
வீரர்கள் கங்கா - காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் புக் செய்துள்ளனர். இந்த ரயிலில் சென்னை திரும்ப இருந்த நிலையில் கூட்ட நெரிசலால் ரயிலில் ஏற முடியாத சூழல் ஏற்பட்டதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை தொடர்ந்து துணை முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக வீரர்கள் விமானம் மூலமாக வருகை தர இருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் வீரர்களை விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகல் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு விமானத்தில் சென்று அங்கிருந்து இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வருகை தர உள்ளனர்.