திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சி சரக டி.ஐ.ஜி.வருண்குமாரின் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி.வருண்குமார் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்புடையதல்ல என சீமான் தரப்பு திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயா முன்பு வாதாடினார். இந்த வழக்கை ரத்து செய்யவும் முறையிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்று கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி திருச்சி நீதிபதி விஜயா உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஜூலை 7-ம் தேதி சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது இன்று நீதிபதி விக்டோரியாகௌரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் டி.ஐ.ஜி.வருண்குமார் வழக்கிற்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் டி.ஐ.ஜி.-சீமான் பரஸ்பர சட்ட ரீதியான மோதலுக்கு சற்று ப்ரேக் விடப்பட்டிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்