சென்னை விமான நிலையத்தில், காகித ஆவணங்களுக்குப் பதிலாக முக அடையாளத்தை காட்டி, சரிபார்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளும் டிஜியாத்ரா சேவை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
விமானங்களில் பயணிப்போர் விமான நிலையங்களுக்குச் சென்று, காகித ஆவணங்களான பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டை போன்ற ஆவணங்களை சரிபார்ப்பு செய்த பின்னரே பயணம் மேற்கொள்ள முடியும். இதனால் நேர விரயம் ஏற்பட்டது.
இந்த சிரமத்தைச் சரிசெய்யும் நோக்கில், விமான பயணச் செயல்முறையை காகிதமற்றதாக்கும் டிஜியாத்ரா சேவை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதாவது பயணிகள் ஏர்போர்ட்டில் நுழைந்து, செக்கின் செய்து, உள்ளே சென்று விமானத்தில் ஏறும்போது, பொருட்களை சரி பார்க்கும்போது தங்களது முகத்தை காட்டினால் மட்டும் போதும். இதற்கு பாஸ்போர்ட், ஆதார் அட்டை, கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆவணம், பயணத்திற்கான டிக்கெட் போன்ற எந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை.
டிஜியாத்ரா அமைப்பு, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விமான நிலைய நுழைவுப் புள்ளிகளிலும், பாதுகாப்புத் திரையிடலின் போதும் பயணிகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, இந்த டிஜியாத்ரா என்ற முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மூலம், பயணிகளுக்கு நேரம் மிச்சமாகிறது.
ஏற்கனவே திருவனந்தபுரம், மங்களூரு, விசாகப்பட்டினம் உட்பட 14 விமான நிலையங்களில் இந்த டிஜியாத்ரா வசதி உள்ளது. இந்தநிலையில், ஜூன் மாதம் மேலும் 14 விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் டிஜியாத்ரா சேவை அமல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ராவை மார்ச் 31 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டியின் அனுமதி நிலுவையில் உள்ளதால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“