Advertisment

சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்: வீடியோ எடுத்தவருக்கு அடி: எச்.ராஜா ஆதரவு!

புகாரின் அடிப்படையில் தீட்சிதர்கள் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Thither

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளரான இவர், கடந்த 8-ம் தேதி இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோயிலுக்குள் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

Advertisment

இதனை பார்த்த இளையராஜா, தனது செல்போனில் அதை வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது அவரைச் சுற்றி வளைத்த தீட்சிதர்கள் சிலர், இளையராஜாவின் செல்போனை பிடுங்கிக் கொண்டு, அவரைத் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சிகிச்சைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளையராஜா, அதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தீட்சிதர்கள் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதையடுத்து இளையராஜாவைத் தாக்கிய தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணியினர், சிதம்பரம் நகரக் காவல் நிலையத்திற்கு முன்பும், மேலவீதி தந்தை பெரியார் சிலைக்கு முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், தெய்வீக பக்தர்கள் பேரவையின் தலைவருமான ஜெமினி என்.ராதா, "பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்கர் மன்னர்கள், விஜயநகர பேரரசு போன்ற மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட, பக்தர்களுக்குச் சொந்தமான உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தற்போது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் இருக்கிறது.

புகழ்பெற்ற இந்தக் கோயில் தற்போது கிரிக்கெட் மைதானமாக மாறியிருப்பது வேதனை. இப்போது ஆகம விதி என்ன ஆனது என்று தீட்சிதர்கள்தான் கூற வேண்டும். நடராஜர் கோயிலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளும், இப்படியான நிலைகளும் மாற வேண்டும் என்றுதான் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலகப் புகழ் பெற்ற கோயிலை கிரிக்கெட் மைதானமாக மாற்றியவர்கள் மீது காவல்துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையில் தீட்சிதர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனது செல்போனை திருப்பித் தரும்படி கேட்கிறார் இளையராஜா. அதற்குத் தீட்சிதர்கள், `உங்கள் வீட்டிற்குள் வந்து வீடியோ எடுத்தால் சும்மா இருப்பியா? என்கின்றனர். அதற்கு இளையராஜா, `அது வீடு. இது கோயில்’ என்கிறார். அப்போது, `எங்கள் கோயில்யா இது’ என்று தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "சிதம்பரத்திற்கு அருகிலுள்ள வல்லம்படுகைதான் என் சொந்த ஊர். அதனால் அடிக்கடி நடராஜர் கோயிலுக்கு வந்து தரிசிப்பது என் வழக்கம். அப்படி நேற்று முன் தினம் 7-ம் தேதி இரவு கோயிலுக்குச் சென்ற நான், சிறிது நேரம் அமரலாம் என்று ஆயிரம் கால் மண்டபத்துக்குச் சென்றேன். அப்போது ஆயிரம் கால் மண்டபத்துக்குப் பக்கத்தில் சுமார் 20 தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கிரிக்கெட் விளையாடியதை என் செல்போனில் வீடியோ எடுத்தேன். அப்போது சுமார் 10 தீட்சிதர்கள் கும்பலாக ஓடிவந்து, வீடியோ எடுக்கக் கூடாது என்று கூறினார்கள். உடனே வீடியோ எடுத்தால் என்ன தப்பு என்று நான் கேட்டதற்கு, `இது எங்கள் கோயில். நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு இருப்போம். அதை நீ எப்படி வீடியோ எடுக்கலாம்’ என்றனர். அதற்கு, `கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடலாம் என்று ஆகம விதியில் இருக்கிறதா?’ என்று நான் கேட்டேன்.

அதற்கு, `அதையெல்லாம் நீ கேட்கக் கூடாது. உன்னால் என்ன செய்ய முடியும்? நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கே கூட போ’ என்று சொல்லிக் கொண்டே, என் கையை முறுக்கி, தலையைக் கவிழ்த்து, என்னுடைய செல்போனை பிடுங்கிக் கொண்டார்கள். அங்கிருந்த தீட்சிதர்கள் என்னை அடித்து, என் நெஞ்சில் குத்தினார்கள். அதன்பிறகும் கூட என்னை அவர்கள் வெளியில் விடாமல், சுற்றி வளைத்துக் கொண்டார்கள். `யாருடா கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார்கள். நீங்கள் வெளியில் விளையாடுகிறீர்கள். நாங்கள் உள்ளே விளையாடுகிறோம். இது எங்கள் கோயில்டா’ என்று கூறினர்.

அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் என்னை விட்டார்கள். அதன்பிறகு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்த நான், நேற்று 8-ம் தேதி காலை காவல் நிலையத்தில் புகாரளித்தேன்” என்றார். இதற்கிடையே, தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா "ஏன் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடினா என்ன தப்பு. கர்ப்பக்கிரகத்தில் (கருவறை) விளையாடினார்களா? நான் உடற்கல்வி பேராசிரியரின் மகன். எனது அப்பா லெஸிம், லாட்டி, மால்கம் போன்றவற்றை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்.

இதெல்லாம் கற்றுக்கொண்டது அவருடைய தவறு என்று கூறுவீர்களா?. உடற்பயிற்சி, விளையாட்டு என்பது எல்லோரும் செய்ய வேண்டும். இதில் எந்தவொரு தவறும் இல்லை" என தீட்சிதர்களுக்கு ஆதரவாக பேசியிருப்பது ஆன்மிக அன்பர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

க.சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment