தினமலர் நாளிதழின் திருச்சி, வேலூர் பதிப்புகளின் ஆசிரியர் ஆர். ராகவன் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
தமிழ் நாளிதழான தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் நான்காவது மகன் ஆர். ராகவன். தினமலர் நாளிதழின் பங்குதாரரான இவர், திருச்சி, வேலூர் பதிப்புகளின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். தினமலர் நாளிதழின் விற்பனையை அதிகரிப்பதில் ஆரம்ப காலம் தொட்டே ஆர்வத்துடன் உழைத்தவர்.
தமிழகத்தின் நதிகளைக் காப்பதிலும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதிலும் ஆர். ராகவன் அதிக ஆர்வம் காட்டினார். இது தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடச் சொல்வார். நேரடியாக நிருபர்களையும் செய்திப் பிரிவினரையும் அழைத்து எந்தெந்த நீர் ஆதாரங்கள் அழிந்து வருகின்றன என்பதைச் சொல்லி, அது தொடர்பாக செய்தி சேகரித்து வருமாறு அனுப்பி வைப்பார்.
தினமலர் ஊழியர்களின் நலனிலும், அவர்களின் குடும்பத்தினர் நலனிலும் அக்கறை காட்டியவர். சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த ராகவன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் காலமானார். அவரது இறுதிச்சடங்கு, திருச்சியில் நாளை மதியம் நடக்கிறது. அவரது இறுதி ஊர்வலம்,நாளை மதியம் 3.30 மணிக்கு, திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி, பறவைகள் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. ராகவனுக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஆர். ராமசுப்பு, ஆர்.ஆர். கோபால்ஜி என்ற மகன்களும் உள்ளனர்.
ராகவன் மறைவு பத்திரிகை உலகுக்கு பேரிழப்பு என்று அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருச்சியில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.