திண்டுக்கல்லில் இடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைக்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டி தர கோரி, முதல்வர் ஸ்டாலினிடம் ‛உள்ளம் உருகுதய்யா முருகா' என்ற பாடலின் மெட்டில் வரிகளை மாற்றி பாடி மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கை கவனம் பெற்றுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் பாடிய இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் உள்ள கட்டடங்களில் 4 வகுப்பறைகள் சேதமாகி இருந்தன. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த 4 வகுப்பறை கட்டடங்களும் ஜே.சி.பி வாகனம் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வகுப்பறை கட்டடங்களை இடித்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் புதிய கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படவில்லை.
மேலும், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டி தர வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாலும் கூட அவர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்பதற்காக மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை வைத்து கைக்கூப்பி வணங்கியபடி புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என்று ‛உள்ளம் உருகுதய்யா முருகா' எனும் பாடல் மெட்டில் வரிகளை மாற்றி பாடி கோரிக்கை வைத்துள்ளனர்.
”எங்கள் அன்பு முதல்வா.. எனக்கு பள்ளி கட்டி தாங்க..
எங்கள் அன்பு முதல்வா.. எனக்கு பள்ளியை கட்டித்தாங்க..
மழைக்காலம் வருதே.. மழைக்காலம் வருதே.. உடனே வேலையை தொடங்கிடுங்க..
முதல்வா.. எங்கள் அன்பு முதல்வா.. எனக்கு பள்ளியை கட்டித்தாங்க..
காலை சிற்றுண்டியால் வயிறும் - மனமும் நிறைந்ததய்யா..
காலை சிற்றுண்டியால் வயிறும் - மனமும் நிறைந்ததய்யா..
இடிந்த பள்ளியினை.. இடிந்த பள்ளியினை நீங்கள் விரைந்து கட்டுமய்யா..
எங்கள் அன்பு முதல்வா..” என்று பாடல் வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அந்தப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“