திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பட்டியல் இனத்தவரை இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இவருடைய பேச்சுக்கு சமூக செயற்பாட்டாளர்கள், தலித் செயற்பாட்டாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திண்டுக்கல் ஐ லியோனி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 19-ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தி.மு.க.சார்பில் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திண்டுக்கல் ஐ லியோனி, பட்டியல் இனத்தவர் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது: “சட்டையைக் கழற்றி அல்லையில் வைத்துக்கொண்டு நடந்துபோன சமுதாயம், செருப்பைத் தூக்கி தலையிலே வைத்துக்கொண்டு நடந்துபோன சமுதயாத்தை இன்று வணக்கத்திற்கு குரிய மேயர் அவர்களே என்று சொல்ல வைத்த திராவிட மாடல், திராவிட புரட்சி செய்த தலைவர் இல்லையா?
திண்டுக்கல் ஐ லியோனி திமுகவின் தலைமைக் கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராகவும் உள்ளார். கலந்து கொண்டு பேசுகையில், “பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமைவாங்கித் தந்தது நீதிக் கட்சி. பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர். பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். பெண் விடுதலைக்கு பாடிய பாரதியார் பாரதிதாசன் வழியில் ஆட்சி நடத்தி வருபவர் ஸ்டாலின்.
செங்கோட்டை அருகே டெல்லியில் அறிவாலயத்தை நிறுவிய தலைவர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என்பதற்கு அதுவே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை என பல சாதனைகளையும் மக்கள நலத் திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி.
செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்” என்று திண்டுக்கல் லியோனி பேசினார்.
திண்டுக்கல் ஐ லியோனியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. திண்டுக்கல் ஐ லியோனியின் பேச்சு குறித்து தலித் செயல்பாட்டாளர்கள் பலரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து, திமுகவைச் சேர்ந்த ஆர்.பிரியா சென்னையின் முதல் தலித் பெண் மேயராக பதவியேற்றார். இவர் சென்னையின் மூன்றாவது பெண் மேயர் ஆவார். பிரியா தனது 18 வயதில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இந்த நிலையில், திண்டுக்கல் ஐ லியோனி பட்டியல் இனத்தவர் குறித்து பேசிய கருத்து குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறியதாவது: “திண்டுக்கல் ஐ லியோனி, சென்னை மேயர் பிரியாவைப் பற்றி பேசி ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார். சமீப காலமாக திமுகவினர் தலித் சமூகத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததாக கூறுவதை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் இப்போது பட்டியல் இனத்தவர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளித்துள்ளது.
திமுகவினர் தங்களை தலித்துகளுக்கு அதிகாரம் அளித்த கட்சியாக காட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்ததெல்லாம் அவமதிப்பு. அவர் பேசியது ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. இதை ஏற்க முடியாது, அவர் மீது திமுக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தால், மற்றவர்களும் இதே போல் பேச தூண்டும்.
திமுகவில் எத்தனை தலித்துகள் திமுக மாவட்டச் செயலாளர் பதவி வகிக்கிறார்கள்? எத்தனை தலித்துகள் அமைச்சரவையில் இருக்கிறார்கள்? அமைச்சரவையில் தலித் மக்கள்தொகைக்கு ஏற்ப எண்ணிக்கை அளவில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் இல்லையா? பல பகுதிகளில் தலித் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து கேள்விகளை எழுப்ப விரும்பினோம். ஆனால், இதுபோன்ற சாதிவெறி பேச்சுகளால் எங்கள் வாயை மூட முயற்சி செய்கிறார்கள்.” என்று கூறினார்.
இதனிடையே, பாஜகவின் பட்டியல் இன அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் சனிக்கிழமை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திண்டுக்கல் ஐ லியோனி மீது புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியதை சமூக வலைதளங்களில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதில் திமுக தலைமைக் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பட்டியலின சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கொச்சையாக பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், திண்டுக்கல் ஐ லியோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட்டு கைது செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் தொடர்ந்து தலித்துகளின் பார்வையில், அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வரும் தி ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், திண்டுக்கல் ஐ லியோனி மீது புகார் அளித்துள்ள பாஜக, இதே போல, பட்டியல் இனத்தவரை இழிவாகப் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது பாஜக ஏன் வழக்கு தொடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் தனது பதில் கூறியிருப்பதாவது: “லியோனி கிறித்துவம் ஏற்ற தலித் குடும்பத்தைச் சார்ந்தவர். இப்போது, கிறித்துவர் என்கிற வகையில் (BC) அவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் நீதிமன்றத்தில் நிற்குமா என்பது ஐயமே. மேலும், இது புதிய விவாதங்களையும் சச்சரவுகளையும் உருவாக்கும். குறிப்பாக தலித் கிறித்துவர்களின் உரிமைக் குரலுக்கு எதிராக அரசுகளால் இயங்க இது வழிவகுக்கும். அதாவது, லியோனி மீது வன்கொடுமை வழக்கு என்றால், 'தலித் கிறித்துவர்' என்கிற குரல் இனி எடுபடாமல் போகும் வாய்ப்பை இந்துக்கள் உருவாக்குவார்கள். அதற்குதான் பாஜக இதில் நுழைகிறது.
லியோனியின் வரலாற்று முரண்பாட்டோடு கூடிய இழிவான பேச்சு கண்டிக்கத்தக்கது. ஆனால், வன்கொடுமை வழக்கு தேவையில்லை. அவர் பேசியது தலித்தல்லாத சாதி இந்துக்களையும் குறிக்கும். எனவே, வன்கொடுமை வழக்கு தொடுக்கும் பாஜகவிற்கு இதில் சூழ்ச்சி இருப்பதையே அறியமுடிகிறது.” என்று கூறியுள்ளார்.
பட்டியல் இனத்தவர் குறித்து திண்டுக்கல் ஐ லியோனி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பேச்சு குறித்து விளக்க அளித்துள்ளார்.
திண்டுக்கல் ஐ லியோனி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “முன்பு செருப்பை கையிலும் தலையிலும் சுமக்க வைத்து கொடுமைப் படுத்திய ஆதிக்க சமுதாயத்திடமிருந்து விடுதலை பெற வைத்து இன்று பெரும் பொறுப்புகளை பெற வைத்த திராவிட இயக்கமும்,
தலைவர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் என்ற பொருளில் சொல்லப்பட்டது ஒழிய எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
ஒரு வார்த்தையை எடுத்து, நமது கைகளை வைத்தே, நமது கண்களை குருடாக்கும் பாஜகவின் மலிவான அரசியலை நம் மக்கள் புரிந்து கொள்வார்கள்.” என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.