திண்டுக்கல் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 22வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன் திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இருந்தன.
2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஆகிய 3 பேரவைத் தொகுதிகள் திமுக வசம் உள்ளன. திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 3 பேரவைத் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக எட்டு முறை வெற்றி பெற்றுள்ளது (இடைத்தேர்தல் உட்பட). காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக 4 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
முதல் தேர்தலிலேயே அதிமுக முதல் வெற்றி
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய பிறகு, முதன்முதலாக அக்கட்சி களம் கண்டது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில்தான். முதல் தேர்தலிலேயே அதிமுக முதல் வெற்றியையும் பெற்றது. இரட்டை இலை சின்னத்தை முதன்முறையாகப் பெற்றதும் இந்தத் தேர்தலில்தான்.
அதிமுகவின் முதல் மக்களவை உறுப்பினரான திண்டுக்கல் தொகுதியிலிருந்து கே.மாயத்தேவர் தேர்வு செய்யப்பட்டார்.
நேரடியாக களமிறங்கிய திமுக
1980ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் நேரடியாக களமிறங்கி வெற்றிக் காணவில்லை. காங்கிரஸோடு கூட்டணியின்போது, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸுக்கு திமுக அளித்து வந்தது.
அதனுடைய சிறந்த பயனாக 2004 முதல் 2009 என இரண்டு முறை என்.எஸ்.வி.சித்தன் வெற்றி பெற்றார்.
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
35 ஆண்டுகளுக்கு பின்னர், திமுக இந்த தொகுதியில் நேரடியாக 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தொகுதியை கைப்பற்றியது. இதில் திமுக வேட்பாளர் வேலுசாமி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை விட 5,38,972 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இதில், வேலுச்சாமி 64.60% வாக்குகளுடன் மொத்தம் 746,523 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து 2,07,551 வாக்குகள் பெற்றார்., இது தென்னிந்தியாவிலேயே அதிக வித்தியாசமாகும்,
வாக்காளர்கள் விவரம்
ஆண் வாக்காளர்கள்- 7,80,096
பெண் வாக்காளர்கள்- 8,26,737
மூன்றாம் பாலினத்தவர்- 218
மொத்தம் 16,07,051 வாக்காளர்கள் உள்ளனர்
2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் நேரடியாக போட்டியிடாமல், திண்டுக்கல் தொகுதியை தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டன.
2024-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி: போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்
தி.மு.க- சச்சிதானந்தம் (சி.பி.எம்)
அ.தி.மு.க- நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ.)
பா.ஜ.க- திலகபாமா (பா.ம.க)
நா.த.க- கைலைராஜன் துரைராஜன்
இவர்களுடன் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
தேர்தல் முடிவுகள் 2024
சச்சிதானந்தம்- 6,70,149
முகமது முபாரக்- 2,26,328
திலகபாமா-1,12,2503
கயிலை ராஜன்-97,895
இதன்மூலம் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 4,43,821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவாகிய வாக்குகளில் 58.97 சதவீத வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம், இடைத் தோ்தல் உள்பட 19 மக்களவைத் தோ்தலை எதிர்கொண்ட திண்டுக்கல் தொகுதியில் முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளா்களில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணி வேட்பாளா் முகமது முபாரக் ஆகியோர் தவிர, பாமக, நாம் தமிழா் கட்சி உள்பட 13 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.