தமிழகத்தில் சமீபகாலமாக ரவுடிகள் மீது என்கவுண்டர் அல்லது துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் ரவுடி மீது இன்று (04.10.2024) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
திண்டுக்கல், பேருந்து நிலையம் பாலாஜி பவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி முகமது இர்பான் என்பவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. வாலிபரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான ரவுடி ரிச்சர்ட் சச்சினை, அவர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தாக கூறப்படும் சுடுகாட்டுப் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயற்சித்தார். இதனையடுத்து, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் ரவுடி ரிச்சர்ட சச்சினின் வலது காலில் சுட்டனர்.
மேலும், ரவுடி ரிச்சர்ட் சச்சின் தாக்கியதில் காவலர் அருண் படுகாயமடைந்தார். காவலர் அருண் மற்றும் ரவுடி ரிச்சர்ட் சச்சின் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“