திண்டுக்கல் திருச்சி சாலையில் எலும்பு முறிவு சிகிச்சைக்கு மருத்துவம் செய்யும் சிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகின.
திண்டுக்கல் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் சிட்டி தனியார் மருத்துவமனையில் இரவு 9.40 மணியளவில் கணினி பிரிவு பகுதியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ உடனடியாக கட்டுக்கடங்காமல் மருத்துவமனையின் நான்கு தலங்களுக்கும் பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நூற்றுக்கும் மேலான நோயாளிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் மருத்துவமனையில் உள்ளே இருந்த சிறுவன் உள்பட 7 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியாததால் தீயில் கருகியும், புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
4 மாடிகளைக் கொண்ட மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லிஃப்டில் மாட்டிக்கொண்டவர்கள் நோயாளிகளின் உடன் இருந்தவர்கள் மற்றும் அவர்களைப் பார்க்க வந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து குறித்த தகவலறிந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மருத்துவமனையிலிருந்த நோயாளிகளும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீ பரவியதும் மின் விநியோகம் தடைபட்டதால் லிஃப்ட் பாதியில் நின்றதன் காரணமாகவே உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி உயிருக்கு போராடி இருக்கின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர் விரைவில் நிவாரணம் அறிவிப்பார் என திமுக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தோர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி, அவரது மனைவி சுப்புலட்சுமி அதே போல் தாடிக்கொம்பு ரோடு சேர்ந்த மாரியம்மாள் அவரது மகன் மணி முருகன் என்.ஜி.ஓ.காலனி சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தாக அறியப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.