என் மகன் இவ்வளவு மார்க் எடுப்பான் எனத் தெரிந்திருந்தால் குடித்திருக்கவே மாட்டேன் : கதறிய தினேஷின் தந்தை!

தந்தையின் குடிபோதைக்கு தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ் 12ம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களைப் பார்த்து தந்தை கதறி அழுதார்.

By: May 17, 2018, 12:46:30 PM

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவன் தினேஷ், சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரயில் நிலையம் அருகே தற்கொலை செய்துகொண்ட மாணவன் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு இறந்தார். அந்தக் கடிதத்தில், தந்தையின் குடிப்பழக்கத்தினால் தான் தற்கொலை செய்துக்கொளவதாகவு, தந்தை குடிப்பதால் இறுதி சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் தான் மரணித்த பிறகாவது தந்தை குடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. தந்தையின் குடிப்பழக்கத்திற்காக, கனவுகளை விரட்டிச் செல்லும் வயதில் சாவைத் தேடிக்கொண்ட சம்பவம் தமிழகத்தையே பதற வைத்தது. 12ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தினேஷ், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவை காலம் காலமாக மனதில் சுமந்து வந்தவர்.

மகனின் மரணத்திற்குப் பிறகு தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும், இனி நிச்சயம் மது அருந்தமாட்டேன் என்றும் தினேஷின் தந்தை கூறினார். “என்னைப் பார்த்து மற்றவர்கள் திருந்துங்கள்” என்று மனம் விட்டு அழுத தந்தை மாடசாமி தற்போது மீண்டும் கதறி அழுதுள்ளார்.

12ம் தேர்வெழுதிய மாணவர் தினேஷ் தனது +2 தேர்வில் 1024 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

தமிழ் – 194
ஆங்கிலம் – 148
இயற்பியல் – 186
வேதியியல் – 173
உயிரியல் – 129
கணிதம் – 194
மொத்தம் – 1024

மகன் எடுத்துள்ள இந்த மதிப்பெண்களைப் பார்த்து, “என் மகன் இவ்வளவு மதிப்பெண் எடுப்பான் எனத் தெரிந்திருந்தால் நான் குடித்திருக்கவே மாட்டேன். குடும்ப பிரச்சனையிலும் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறானே, நான் நல்லா இருந்திருந்தால் அவன் இன்னும் நல்லா படித்திருப்பான். என் மகனை நானே கொன்றுவிட்டேனே. அவன் டாக்டர் கனவையும் நானே சிதைத்துவிட்டேனே.” என்று கதறி அழுதார்.

மது அருந்துவதால் மட்டும் மரணங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், குடும்பத்தினரின் மதுப் பழக்கம் தற்போது குழந்தைகளின் உயிர்களையும் காவு வாங்கத் தொடங்கியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் கோபத்தையும் வேதனையும் அளிப்பதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dinesh score in 2 exam results

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X