தி.மு.க-வின் பிற்போக்குத்தனமான தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வாய்ப்புகளின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்தக் கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தனது இல்லத்தில் இரவு விருந்து அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
வருகிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமயில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக சென்னையில் அறிவித்தனர்.
பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை அறிவித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இயல்பானது. அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது; தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
“ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை தி.மு.க கையில் எடுத்துள்ளது; மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது தி.மு.க ஊழல், பட்டியலின மக்கள் மகளிர் வன்கொடுமை, போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.” என்று அமித்ஷா கூறினார்.
மேலும், “தமிழ் மக்கள், தமிழ் மொழியை கவுரவமாக கருத்கிறோம். பிரச்னையாக பார்த்ததில்லை. பிரதமர் மொடி தமிழ் மொழியை மதித்து காசி - தமிழ் சங்கமம் நடத்தினார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு தி.மு.க பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப தி.மு.க மும்மொழிக் கொள்கை குறித்து பேசி வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை பயன்படுத்துகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க-வுடன் கலந்த் பேசி முடிவு எடுப்போம்” என்று கூறினார்.
“மக்களின் கவனத்தை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை, நீட் போன்ற விவகாரங்களை தி.மு.க எழுப்புகிறது. வேற்றுமை இருந்தாலும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று அமித்ஷா கூறினார்.
எடப்பாடி பழனிசாமியால்தான் அண்ணாமலை மாற்றமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா, “அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகே அ.தி.மு.க கூட்டணிக்கு வந்ததாக கூறுவதில் உண்மை இல்லை. இப்போதும் மாநிலத் தலைவராகவே என் அருகில் உட்கார்ந்திருக்கிறார்” என்று கூறினார்.
பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதியானதையொட்டி அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி வீட்டில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் இ.பி.எஸ், அமித்ஷாவுடன் அ.தி.மு.க மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “2026-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியாக கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நானும் இன்று வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது.
தி.மு.க-வின் பிற்போக்குத்தனமான தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வாய்ப்புகளின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்தக் கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.
எனது இல்லத்தில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றாக, பிரகாசமான, வலுவான மற்றும் துடிப்பான தமிழ்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடனும் உறுதியான உறுதியுடனும் நாம் முன்னேறுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.