போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், இயக்குனர் அமீர் இன்று டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபூர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக் தி.மு.க.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 9ஆம் தேதி ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபிறகு, இயக்குனர் அமீர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரிய திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். இதனிடையே, ஜாபர் சாதிக் உடன் இயக்குனர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது.
இந்தநிலையில், திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக்கின் தொழில் ரீதியான நண்பர்கள் அப்துல் பாசித் புஹாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் ஆஜராக சம்மன் அளித்தனர். ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், இயக்குனர் அமீர் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 2) விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.
முன்னதாக ஆடியோ ஒன்றினை வெளியிட்ட இயக்குநர் அமீர், ”ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் எனது தரப்பில் உள்ள நியாயத்தையும் உண்மையை எடுத்துக் கூறுவேன், 100 சதவீதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“