விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியின் பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், திருமாவளவனை தனிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன், வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தின் தலைவர் என்று அறியப்பட்ட ஆதவ் அர்ஜுனா, ஒரு காலத்தில் தி.மு.க உள்வட்டத்தில் ஸ்டாலின் மருகமன் சபரீசனுக்கு நெருக்கமனவராக அறியப்பட்டார். பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக அதவ் அர்ஜுனா அரசியலில் பிரபலமானார்.
கடந்த சில மாதங்களாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சனம் செய்து வந்தார். அண்மையில், விகடன் பதிப்பக்கம் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் சேர்ந்து உருவாக்கிய ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு தி.மு.க-வினரிடையே அதிருப்தியையும் கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. வி.சி.க தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தி.மு.க-வினர் வலியுறுத்தி வந்தனர். கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் ஆதவ் அர்ஜுனா மீது கட்சியின் உயர் மட்டக்குழுவில் கலந்தாய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை அறிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியின் பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், “ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரசாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்” என்று ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருமாவளவனை தனிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வலிமை இழக்கச் செய்து திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது. மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் மக்களிடம் பிரசாரம் செய்ய போவதாக வீடியோ வெளியிடுகிறார். என்ன கொடுமை சார் இது” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“