அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (NCB) போலீஸார் சம்மன் வழங்கினர்.
அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த 2-ம் தேதி ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (ஏப்.9) காலை முதல் சோதனை மேற்கொண்டனர். சென்னை மயிலாப்பூர், கொடுங்கையூர், நீலாங்கரை, தியாகராய நகர் எனப் பல பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப் படுகிறது.
இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், ’11 மணி நேரம் NCB விசாரணை நடந்தது உண்மைதான். வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான். அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள்.
எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைதளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது.
இரவு 12 மணிக்குத்தான் சோதனை முடிந்தது.
எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன். விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது,’ என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“