Advertisment

பிரபாகரனை ஜாமீன் எடுத்தவர், ஜெ.அன்பழகனா? இயக்குனர் அமீர் சர்ச்சை

Director Ameer: 1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரபாகரனை ஜாமீன் எடுத்தவர், ஜெ.அன்பழகனா? இயக்குனர் அமீர் சர்ச்சை

LTTE Prabhakaran Pondi Bazar police station bail, pazha nedumaran, ks radhakrishnan, Ameer, Ameer director, அமீர், இயக்குனர் அமீர், ஜெ.அன்பழகன்

Director Ameer Controversy: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மறைந்த ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்ததாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குனர் அமீர். இதற்கு பல்வேறு தரப்பினரும் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

Advertisment

திமுக தலைவர்களில் ஒருவரான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று (ஜூன் 10) மரணம் அடைந்தார். அவரைப் பற்றி பலரும் பாசிட்டிவான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அரசியல் துறை மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தராக சினிமாத் துறையிலும் கால் பதித்தவர் ஜெ.அன்பழகன். அந்த வகையில் இயக்குனர் அமீரும் அவருக்கு நெருக்கமானவர்.

ஜெ.அன்பழகன் மறைந்ததும், இயக்குனர் அமீர் பல்வேறு ஊடகங்களில் ஜெ.அன்பழகனின் ஆளுமை குறித்து பதிவு செய்தார். இதற்கிடையே இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமீர், ‘1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான். கலைஞர் கூறியதால், சென்னை தி.நகரில் தனது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க வைத்திருந்தார்.

பிரபாகரனுக்கு சாப்பிடத் தேவையானவற்றை கேட்டுக் கேட்டுச் செய்தார் அன்பழகன். ஈழ அரசியலைப் பற்றி அப்போது அவருக்கு பெரிய புரிதல் இல்லாவிட்டாலும், கலைஞர் சொன்னதால் மாவட்டச் செயலாளராக இருந்த அன்பழகன் இவற்றைச் செய்தார். இதையெல்லாம் அன்பழகனே என்னிடம் கூறியிருக்கிறார்’ என வீடியோ பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் அமீர்.

இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. காரணம், அந்தக் காலகட்டத்தில் திமுக.வில் மாவட்டச் செயலாளராக ஜெ.அன்பழகன் இல்லை. தவிர, திமுக.வின் தற்போதைய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பழ நெடுமாறன் ஆகியோர் ஏற்பாட்டில் பிரபாகரன் ஜாமீனில் எடுக்கப்பட்டார். பழ நெடுமாறன் தன்னுடன் பிரபாகரனை மதுரைக்கு அழைத்துச் சென்று தனது இல்லத்தில் தங்க வைத்திருந்தார். இதுதான் வரலாறு!

இதற்கான வாழும் சாட்சிகள் பலர் இருக்க, அமீர் ஏன் இப்படிப் பேசினார்? என்பது சமூக வலைதளங்களில் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. ‘இதெல்லாம் சீமானுக்குத் தெரியுமா?’ என சிலர் அமீரை கலாய்க்கிறார்கள்.

'வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை' - பிரபாகரன் ஜாமீன் சர்ச்சை குறித்து அமீர்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுவது என்ன?

இந்த விவகாரம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ‘இது குறித்து பத்திரிக்கையாளர் நண்பர்கள் ஏகலைவன், கல்கி ப்ரியன தக்க விபரங்களோடு பதிவிட்டுள்ளார்கள். தம்பிகள் நரசிம்மன், பாலகிருஷ்ணனும் இது குறித்து விபரமான பதிவுகளை செய்துள்ளனர். இருப்பினும் என்னுடைய விளக்கம் வருமாறு:

ட்விட்டர் எனப்படும் சமூக ஊடகத்தில் கண்டதாக நண்பர் ஒருவர் ஓரு படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். மிகவும் ரசித்தேன், மகிழ்ச்சி அடைந்தேன். வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகின்றது என்பதற்கு கண்முன் காணப்படும் உதாரணமாக கொள்க.

அந்த சம்பவத்தை பற்றி முழுதும் அறிந்த பலரும் இன்றும் அரசியலில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். நினைவில் உள்ளதை பகிர விரும்புகின்றேன். கவனிக்க.

பிரபாகரன், முகுந்தன் உள்ளிட்ட பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம் 19-05-1982 அன்று நடந்தது. கடந்த 19.05.1982 அன்று ‘தொட்டால் சுடும்’ என்ற திரைப்படத்தை தி.நகர் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்து விட்டு அங்குள்ள செலக்ட் ஓட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு பாண்டி பஜாரில் நடந்துச் செல்லும் போது கீதா கபே முகுந்தனும் பிரபாகரனும் இரவு 9.30 மணியளவில் சுட்டுக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தில் பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஓடி வந்தார்கள். கரிகாலன் என்ற பிரபாகரன், ரவீந்திரன் மற்றவர்களையும் பிடித்து பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தப்பித்து ஓடி விட்டார். அவரை இரண்டு நாள் கழித்து கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள். அப்போது அந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நந்தகுமார் என்ற துணை ஆய்வாளர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியை கையகப்படுத்தினார். ஜோதீஸ்வரன் என்ற கண்ணனும் கைது செய்யப்பட்டார். அங்கு தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். இதெல்லாம் நினைவுகள்.

இந்த வழக்கில் பழ. நெடுமாறன், பிரபாகரன், எனது வாக்குமூலம், முகுந்தன் வாக்குமூலம், இரவீந்திரன் வாக்குமூலம், ஜோதீஸ்வரன் வாக்குமூலம் மற்றும் தெருவில் நடந்துச் சென்ற சிலரின் வாக்குமூலம் மட்டுமே காவல் துறையால் பெறப்பட்டது. 20, 21 - 05-1982 ஆகிய இருநாட்கள் காவல்துறை மந்த வெளி Admiralty hotel இல் விசாரனை நடைபெற்றது. பின் சிபிசிஐடி க்கு மாற்றி கண்கானிப்பளார் வெள்ளியங்கிரி தலைமையில் புலன் விசாரணை நடந்தது.

அதற்கு அடுத்த நாள் நானும் பிராபாகரன் தங்கியிருந்த சாலைத்தெரு வீட்டில் 22-05-1982 அன்று டி.ஐ.ஜி மோகன்தாஸ் தலைமையில் ரெய்டு நடத்தப்பட்டது. நான் வழக்கு நடத்தும் ஆவணங்கள் எனது உடமைகளை மற்றும் பிரபாகரனின் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

பிரபாகரனை 23-05-1982 அன்று சென்னை மத்திய சிறையில் சந்தித்தேன். அடுத்த நாள் நெடுமாறன் அவர்களுடன் சென்று சந்தித்தேன். 24-07-1982 அன்று வை.கோ அவர்களை அழைத்து சென்று பிரபகரனை சந்தித்தேன். 05-08-1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை ஆணை கோரி மனுவை தாக்கல் செய்தேன். அடுத்தநாள் 6-8-1982 நிபந்தனையின் பேரின் பிணை ஆணை கிடைக்கப்பெற்றேன். மூத்த வழக்கறிஞர்

என் .டி.வானமலையும் நானும் ஆஜர் ஆனோம்.

நிபந்தனையின் படி பிரபாகரன் மதுரையிலும் , முகுந்தன் சென்னையிலும் தங்கி காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும். நெருமாறன் பிரபாகரனை அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். மதுரை, மேலவாசி வீதி, விவேகானந்த அச்சகத்திற்கு எதிரே உள்ள தனது பழைய வீட்டில் தங்க வைத்தார். அந்த வீட்டிற்கு அருகில் தான் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி காசிம் வீடும் இருந்தது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த ராகவன் புதுக்கோட்டையில் நிபந்தனை ஜாமீனில் தங்கியிருந்தார். கண்ணன் தஞ்சாவூரில், கையொப்பம் இட்டார். இவையாவும் தமிழீழ அரசியல் புரிதல் உள்ள பலருக்கும் தெரியும்.

வழக்கு நினைவுகளை பகிர்கின்றேன். அதற்கு பாடுப்பட்ட நெடுமாறன் , மற்றும் வை.கோ, மூத்த வழக்கறிஞர் என் .டி.வானமலை, எனது ஜூனியரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான கே.எம்.பாஷா , எனது சீனியர் மாநில வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.காந்தி ஆகியோர் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இல்லாதவர்களை சாட்சியாக குறிப்பிட விரும்பவில்லை. பாண்டிபஜார் காவல் நிலையத்தின்அன்றைய மூத்த காவலர் எஸ்.ரங்கசாமி (HC3425) ஆகியோரிடம் வழக்கின் போக்கை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இன்றைக்கும் இந்த ஆவணங்களை வழக்குமன்றத்தில் பார்க்கலாம். SC No.8/1983 on the file of 7th Additional Court, High Court வளாகத்தில் பார்க்கலாம்.

வரலாறுகளை திரித்து சொல்வதால் இவர்களுக்கு என்ன இலாபம் என அறியேன். அதே சமயத்தில் உண்மையை வெளிக்காட்ட வேண்டிய நிலையும் வரலாறு திரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்ற காரணத்தால் இதனை எல்லாம் பதிவு செய்கின்றேன். ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றது. தேவைப்பட்டோர் வந்து பார்த்துக் கொள்ளலாம்.

இது தான் நடந்தது. இது தான் உண்மை.வரலாறு. இதற்கு மேலும் மாற்றிப் பேசினால் என்ன சொல்ல முடியும். இது குறித்தான ஆவணங்களோடு என்னுடைய நினைவுகள், சுவடுகள் என்ற நூலில் விரைவில் வெளிவர இருக்கின்றது. அவ்வளவுதான். இது குறித்த பழைய எனது பதிவுகள்:

நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் மாற்றிப் பேசுவதும் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும்.

யார்மீதும் உள்ள மரியாதையை குறைக்கவோ, காயப்படுத்தவோ இப்பதிவை செய்யவில்லை. நான் சம்மந்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி திரித்து பேசப்படும் போது அமைதியாக இருக்க இயலாது அல்லவா?’ இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

பத்திரிகையாளர் ஏகலைவன்

பத்திரிகையாளர் ஏகலைவன் இது குறித்து வெளியிட்ட பதிவு: ‘சகோதரர் இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில் அதை ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னாரா? என்றால் தவறு அவரிடம் இருந்தே தொடங்குகிறது என்று அர்த்தம். திமுக-வின் முக்கிய தலைவர் ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவை ஒட்டி, அவருடன் தான் திரைப்படம் தயாரிப்பு ரீதியில் பழகியதை சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல்...

பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் கைதான தலைவர் பிரபாகரன் அவர்களை ஜெ அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து 21 நாட்கள் தி.நகர் அலுவலகத்தில் வைத்திருந்தார் என ஏகத்திற்கும் ஒரு வரலாற்றை திரித்துவிட்டுள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1982-ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அது பற்றி “என் பெயர் கரிகாலன்” என்ற பதிவை இங்கே மூகநூலில் விரிவாக எழுதியிருந்தேன்.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் அப்போது பிரபலமடையாத நேரம். இன்று திமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அப்போது பழ நெடுமாறன் அவர்களுடன் காமராஜர் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தார். நெடுமாறன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தலைவருக்கு பழக்கமோ- அறிமுகமோ இல்லாத நேரம்.

துப்பாக்கிச்சூடு நடந்து, தலைவர் கைதான உடன் காவல் நிலையத்தில் இருந்து கே.எஸ்.ஆர். அவர்களுக்கு ஒரு தொலைபேசி. ஆங்கில நாளேட்டு நிருபர், “கைதான நபர் காவல் நிலையத்தில் உங்கள் பெயரைச் சொல்லியிருக்கின்றாராம்” என்கிறார்.

விழுந்தடித்துக்கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார் கே.எஸ்.ஆர். காரணம் தலைவர் அப்போது ராதாகிருஷ்ணன் அவருடைய வீட்டில்தான் தங்கியிருந்தார். அந்த வீடு மைலாப்பூர் சாலைத் தெருவில் இருந்தது.

காவல் நிலையம் சென்றவுடன், ‘சார் இவர்கள் எல்லாம் சிலோன் நக்ஸலைட் போல இருக்கு. துப்பாக்கியால் சண்டை போட்டுக் கொண்டார்கள்” என்றுதான் ஆய்வாளர் கூறுகிறார். அவர்கள் எல்லாம் விடுதலைக் கேட்டுப்போராடும் இயக்கத்தினர் என்ற விவரத்தைக்கூற, பிறகு சம்பிரதாய விடயங்கள் நடந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருந்த மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதுவரையிலும் கே.எஸ்.ஆர். மட்டுமே உடன் இருக்கின்றார்.

தகவல் அறிந்து அன்று இரவே மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த பழ.நெடுமாறன் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்கின்றார். பிரபாகரன் அவர்களை சிலோனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்று அதிபராக இருந்த ஜெயவர்தனே கூற, “அப்படி அனுப்பி வைக்கக்கூடாது” என்ற முனைப்பில் இறங்கினார் நெடுமாறன் அவர்கள்.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். (முந்தைய பதிவில் விரிவாக உள்ளது). நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட்டு மாதம் 5-ம் தேதி தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க மனு தாக்கல் செய்யப்ப்பட்டது.

ஆகஸ்ட்டு 6-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் கே.எஸ்.ஆர், பழ.நெடுமாறன், வானமாமலை உள்ளிட்டவர்கள் நேர்நின்றிருந்தார்கள். ஜாமீன் கிடைத்தது.

அதுவரை நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்து போராடிப் பெற்றவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். வழக்கும் அவர் பெயரில்தான் தாக்கல் செய்யப்பட்டது. கே.எஸ்.ஆருக்கு பின்புலமாக பழ-நெடுமாறன் இருந்தார். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை அவர்கள் வாதாடினார்.

மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையொப்பம் இடவேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதன்படி 7-ம் தேதி அன்று தலைவர் பிரபாகரன் அவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்றார் பழ.நெடுமாறன். அவரது வீட்டில் தங்கிக்கொண்டுதான் அடுத்த நாள் எட்டாம் தேதியில் இருந்து தினசரி காவல் நிலையம் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன்.

உண்மை இப்படி இருக்க, அவரை திமுக பிரமுகரும் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஜெ. அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து, அவரது தி.நகர் அலுவலகத்திலேயே 21 நாட்கள் தங்க வைத்துக்கொண்டிருந்தார் என்கிறார் இயக்குனர் அமீர் அவர்கள். அதாவது அப்படியான தகவலை மறைந்த ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாக கூறுகிறார்.

நிபந்தனையே ‘மதுரையில் தங்கி கையொப்பமிட வேண்டும்’ என்பதுதான். அப்படியிருக்க சென்னை தி.நகரில் எப்படி 21 நாட்கள் தங்கியிருக்க முடியும். அந்த காலகட்டத்தில் எல்லாம் ஜெ.அன்பழகனின் தந்தையார் மறைந்த பழக்கடை ஜெயராமன் அவர்கள் பகுதிச் செயலாளர் பதவியில்தான் இருந்தார்.

பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வைகோ, உள்ளிட்டவர் இன்றும் நேரடி சாட்சியாக, விவரம் அறிந்தவர்களாக உள்ளார்கள். உண்மை இப்படி இருக்க இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அதுவும் அவருடையக் கருத்தாக அல்ல, மறைந்த தலைவர் ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். அவர் ஏன் அப்படி உண்மைக்கு மாறாக கூறினார் என்பதும் தெரிவில்லை.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அடுத்த நாளே தலைவர் கலைஞர் அவர்களுடன் நேர்நின்று புகைப்படம் எடுத்து அதை முரசொலியில் வெளியிட்டு பதிவு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதோடு, அந்த காலகட்டத்தில் திமுக-நிர்வாகிகள் யாரோடும் தலைவருக்கு நேரடி தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதன் பிறகு 1986-ம் ஆண்டு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் திருமணத்தின் போதுதான், அங்கிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். தவைலர் பிரபா அவர்கள் கலைஞருக்கு வணக்கம் கூறுகிறார். ‘பார்க்கலாம், சந்திக்கலாம்’ என்றபடியே காரில் ஏறிச்சென்றார்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியாத “பிரசாந்த் கிஷோர் உடன் பிறப்புகள் (அப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்களாம்) விதம் விதமாய் வந்து பின்னூட்டம் போட்டுக்கொள்கிறார்கள். இப்படியான தகவல்களை எல்லாம், பணம் குவிந்திருக்கிறது என்பதற்காக பெரியார் மடத்து ஆட்கள், ஆமீர் சொல்லும் இப்படியான தகவல்களை எல்லாம் திரட்டி “யுனெஸ்கோ மன்ற பார்வையில் பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு” என்று புத்தகம் போட்டுவிடுவார்கள். அதுதான் வரலாறு என்றும் கூறுவார்கள். காலம்தோறும் வரலாறுகள் இப்படித்தான் திரிக்கப்படுகிறது.’ என கூறுகிறார் பா.ஏகலைவன்.

பத்திரிகையாளர் பிரியன்

பத்திரிகையாளர் கல்கி பிரியன் கூறியிருப்பதாவது: ‘பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிரபாகரன் அவர்களை மறைந்த ஜெ.அன்பழகன் தான் பிணையில் எடுத்து அவரது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க இடம் கொடுத்ததாக "ட்வீட் " போட்டி இருக்கிறார் இயக்குனர் அமீர்.

மறைந்த அன்பழகன் பற்றி சிறப்பாக சொல்ல வேறு பல செய்திகள் இருக்கின்றன. அவர் எனக்கும் நண்பர் தான்.(அவர் மறைந்த சில நிமிடங்களில் இரண்டு செய்தி தொலைக்காட்சிகளில் அவரது சிறப்புகளை பதிவு செய்திருக்கிறேன்)

"ஜெ.அன்பழகன் அவர்களுக்கு பெருமை சேர்க்கிறேன்" என்ற பெயரில் உண்மைக்கு மாறான தகவல்களை அமீர் பதிவு செய்யக்கூடாது. பிரபாகரன் - முகுந்தன் பாண்டிபஜார் மோதலையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளையும் அமீர் தெரிந்து கொள்ள வேண்டும்:

நடந்த தேதி மே ஐந்து 1982, பிரபாகரனுக்கு பிணை கிடைத்தது ஆகஸ்ட் முதல் வாரம். பழ.நெடுமாறன், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் என்.டி.வானமாமலை, பிரபாகரனுக்கு பிணை வாங்கிக் கொடுத்தார். பிணை நிபந்தனை மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்பது. எனவே உடனடியாக மதுரை சென்று நெடுமாறனுக்கு சொந்தமான இடத்தில் தங்கி விட்டார் பிரபாகரன்.

நடந்தது இது தான். மறைந்த அன்பழகன் அவர்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளனாக நெடுமாறன் மற்றும் ராதாகிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததால் எனக்கு இந்த விவரங்கள் தெரியும். இன்னமும் சொல்லப்போனால் அந்த சமயத்தில் நெடுமாறன், ராதாகிருஷ்ணன், புலமைப்பித்தன் இன்னமும் ஒன்றிரண்டு பிரமுகர்கள் தான் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தனர். எனவே அமீர் வரலாற்றை திரிக்கக் கூடாது.

அமீர் போன்ற பிரபலங்கள் சொல்வதை மக்கள் நம்புவாரகள் எனபதாலேயே இந்த பதிவை போட வேண்டியது அவசியமாகிறது. மற்றபடி மறைந்த அன்பழகன் மீது மிக்க மரியாதைஉண்டு.’ என கூறியிருக்கிறார் பிரியன்.

அமீர் ஏன் இப்படிச் சொன்னார்? ஜெ.அன்பழகன் உண்மையிலேயே அமீரிடம் அப்படிச் சொன்னாரா? அமீர் தவறுதலாகப் புரிந்து கொண்டதை வெளியே கூறிவிட்டாரா? அமீர்தான் அவற்றைச் சொல்லவேண்டும்.

video credit: Behindwoods Air

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Ameer Sultan K S Radhakrishnan Ltte J Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment