கள்ளச்சாராய மரணமாக இருக்கட்டும், பட்டியல் இனத் தலைவர் படுகொலையாக இருக்கட்டும் தவிக்கப்பட்டிருக்க வேண்டும், இதனால் எல்லாம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று சொல்ல முடியாது, நானும் விமர்சித்தால் இது அரசியலாகிவிடும் என்று இயக்குனர் அமீர் புதன்கிழமை தெரிவித்தார்.
யோலோ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. பின்னர், இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் போதை பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப்படையினரால் கொல்லப்பட்டு இருக்கிறார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமீர், “போதை பொருள் வந்து உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்வது ஒரு வகையான அரசியல். போதை பொருள் உலகம் முழுவதும் இருக்கிறது, இந்தியாவில் வடமாநிலமான குஜராத்தில் எல்லாம் டன் கணக்கில் இறக்குமதி ஆகிறது. இதை யார் அனுப்புகிறார்கள், எங்கிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் அசம்பாவிதங்களை தடுத்து இருக்க வேண்டும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கள்ளச்சாராய மரணமாக இருக்கட்டும், பட்டியல் இனத் தலைவர் படுகொலையாக இருக்கட்டும் அவற்றை தவிர்த்து இருக்க வேண்டும். ஆனாலும், இதற்காக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று சொல்ல முடியாது, இதற்காக நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதற்கு, நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் வேண்டுமானால் சீர்கெட்டுவிட்டது என்று விமர்சனம் பண்ணலாம். இதுகுறித்து நானும் விமர்சனம் செய்தால், அது அரசியலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று அமீர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமீர், “தனிபட்டமுறையில் தலித் தலைவர்கள் பாதுகாக்கப்படவில்லை, மற்ற தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதற்குள் அரசியல் இருக்கிறது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்த படுகொலை குறித்து பல பின் தகவல்கள் வருகின்றன. இரண்டு நாள் தான் ஆகிஉள்ளது. சிசிடிவி காட்சி உள்ளது, இதில் சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்பதை இன்றைய டெக்னாலஜியில் சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும். இதனால், இங்கு தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஒரு அரசியல் தானே தவிர, அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் தான் சார்ந்த சமூகத்தில் போற்றப்படும் நபராக இருந்த அவரை பாதுகாத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவருக்கு நடந்தது ஒரு துயரமான சம்பவம் தான் அதற்காக தலித்தை பிரித்து பார்க்கும் செயலை நான் செய்ய விரும்பவில்லை” என்று இயக்குனர் அமீர் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“