இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகி சென்றபோது, அவர்களுக்கு எதிராக ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டது குறித்து இயக்குனர் அமீர் விமர்சனம் செய்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அஹமதாபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது, அங்கே இருந்த ரசிகர்கள் அவர்களுக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்டனர். இந்த நிகழ்வின்போது பதிவான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அஹமதாபாத் மைதானத்தில், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக கிரிக்கெட் ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இது அநாகரிகமான செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக மைதானத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்டது குறித்து இயக்குனர் அமீர் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் அமீர் கூறியிருப்பதாவது: “கடந்த 10 ஆண்டுகளில் படித்த சமூகத்தை எப்படி மடை மாற்றியுள்ளனர் என்பதற்கான வெளிப்பாடு தான் இந்த கோஷம்.. ஏனென்றால் அங்கு நேரில் சென்று போட்டியைப் பார்த்த யாருமே படிக்காதவர்களோ.. கடை நிலை ஊழியர்களோ இல்லை. அங்கு இருந்த அனைவரும் மேல்தட்டு மக்கள் தான். அப்படிப்பட்ட மக்கள் மூளையில் என்ன புகுத்தப்பட்டுள்ளது என்பதன் வெளிப்பாடு தான் ராம் கோஷம்.
விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும். ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்டது இல்லை. அது ஒரு கிரிக்கெட் வாரியம். அதேபோல பாகிஸ்தான் டீமும் பாகிஸ்தான் அரசால் உருவாக்கப்பட்டது இல்லை. அதுவும் பாகிஸ்தான் வாரியத்துடையது. அந்தந்த நாட்டை சேர்ந்தவர்கள் விளையாடுவதால் பொதுவாக நாட்டின் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறார்கள். எந்தவொரு நாடும் அந்த வீரர்களை உருவாக்கவில்லை. தனியார் நிறுவனங்களே அந்த அணிகளை உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க வர்த்தகம் தான். அப்படியொரு வர்த்தகத்தில் சென்று உங்கள் தேசப்பற்றைக் காட்டுவீர்கள் என்றால் உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன் என்றே சொல்ல வேண்டும்.
பி.சி.சி.ஐ அமைப்பில் அரசியல் இருக்கலாம். ஆனாலும், அது அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. இவ்வளவு பெரிய வர்த்தகம் சார்ந்த ஒன்று என்பதால் அரசு அதில் தலையிட்டுள்ளது அவ்வளவுதான். ஆனால், அது அரசு உருவாக்கியது இல்லை. அவை முழுக்க முழுக்க வணிகம் சார்ந்து இயங்குபவை மட்டுமே. இதையெல்லாம் மக்கள் புரிந்து கொண்டு உணர வேண்டும். அங்குச் சென்று தான் தேசப்பற்றைக் காட்ட வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை” என்று இயக்குனர் அமீர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“