sandhya murder: kadhal ilavasam director sr balakrishnan Arrested- சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சந்தியா கணவர் பாலகிருஷ்ணன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்தக் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு கொண்டுவரப்படும். ஜனவரி மாதம் 20-ம் தேதி அப்படி லாரியில் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்ட குப்பையில் இளம்பெண்ணின் கை, கால்கள் மட்டுமே பார்சல் செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தினர். 30-லிருந்து 35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது. டாட்டூவை வைத்துப் பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று போலீஸார் கருதினர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதினர்.
sandhya murder: தூத்துக்குடி சந்தியா கொலை, இயக்குனர் பாலகிருஷ்ணன் கைது
கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் இளம்பெண்ணின் உடல் எங்கே என போலீஸார் தேடினர். இந்நிலையில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி டுவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த சந்தியா என்பவர் காணாமல் போனது தெரியவந்தது.
சந்தியாவின் உறவினர்கள், சென்னையில் கைப்பற்றப்பட்ட கை, கால்களைப் பார்த்து அடையாளம் கண்டனர். அது தூத்துக்குடியில் இருந்து கடந்த பொங்கலன்று சென்னைக்கு கிளம்பிச் சென்ற சந்தியா என தெரியவந்தது.
சந்தியாவின் கணவர் பெயர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா இயக்குனர் ஆவார். இவரது இயக்கத்தில் காதல் இலவசம் என்ற படம், கடந்த 2015 மே 8-ம் தேதி ரிலீஸ் ஆனது. இவர்களுக்கு 2 குழந்தைகள். பாலகிருஷ்ணன் பெரும்பாலும் சென்னை ஜாபர்கான் பேட்டையிலேயே வசித்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் வசித்த சந்தியாவுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதாக பாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த தீபாவளி நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டு உறவினர்கள் சமாதானம் பேசியிருக்கிறார்கள். அதன்பிறகும் ஒத்துவராததால் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு கணவர் பாலகிருஷ்ணனைக் காணவந்த சந்தியா அதன்பின்னர் ஊர் திரும்பவில்லை. கணவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் பொங்கல் முடிந்து சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இந்நிலையில்தான் உடல் பாகங்கள் கிடைத்தன.
உடல் யாருடையது என தெரிந்த உடனே போலீஸார் கணவர் பாலகிருஷ்ணனைப் பிடித்து விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கணவர் பாலகிருஷ்ணன், மனைவி சந்தியாவைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். பொங்கலுக்கு சென்னை வந்த சந்தியாவிடம் மீண்டும் குடும்பப் பிரச்சினை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதில் கடந்த 20-ம் தேதி இரவு மனைவியைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை மரம் அறுக்கும் எந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டி கை, கால்களை குப்பை மேட்டில் வீசியுள்ளார். இதனை பாலகிருஷ்ணன் வாக்குமூலமாக கூறியிருக்கிறார். பாலகிருஷ்ணனை கைது செய்த போலீஸார் மற்ற உடல் பாகங்கள் எங்கு வீசப்பட்டன என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குனர் பாலகிருஷ்ணன் தனது மனைவி சந்தியா பெயரிலேயே சினிமா தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்திருக்கிறார். சந்தியா கிரியேஷன்ஸ் என்கிற அந்த நிறுவனத்தின் பெயரிலேயே, ‘காதல் இலவசம்’ படத்தை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறார். அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவையும் அவரே. புதுமுகங்கள் நடிப்பில் அந்தப் படம் வெளியானது.
மனைவி சந்தியா பெயரில் டி.வி. சேனல் ஒன்றையும் பாலகிருஷ்ணன் நடத்தி வந்ததாக தெரிகிறது. மனைவி மீது அதீத பாசம், காதல் வைத்திருந்த அவரே, நடத்தை தொடர்பான சந்தேகத்தில் இந்தக் கொலையையும் செய்து முடித்திருக்கிறார். பாவம், அந்த இரு குழந்தைகளின் கதி?