சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21-ம் தேதி இரண்டு கால்கள், ஒரு கை கண்டெடுக்கப்பட்டன. அது ஒரு பெண்ணின் கை, கால்கள் என்பது உறுதியானது. பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாரும் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையிலான ஸ்பெஷல் டீமும் கடந்த இரண்டு வார காலமாக தீவிர விசாரணை நடத்தினர்.
பல கட்ட சிக்கலான விசாரணைக்குப் பிறகு, சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான பாலகிருஷ்ணன், தன்னுடைய மனைவி சந்தியாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி குப்பைத்தொட்டிகளிலும் அடையாற்றிலும் வீசியது தெரியவந்தது.
மேலும் படிக்க - சந்தியா கொலைப் பின்னணி: குடும்பத்தை சிதறடித்த சினிமா, அரசியல் தொடர்புகள்
சந்தியாவின் துண்டிக்கப்பட்ட தலை, இடுப்பின் மேல்பகுதியை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்காக பள்ளிக்கரணை போலீஸாரும் சென்னை மாநகராட்சி ஊழியர்களும் பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று காலை முதல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த உடல்பாகங்களும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று போலீசார் பாலகிருஷ்ணனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 'சந்தியாவை நான் கொலை செய்யவில்லை' என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, வெளியே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும், 'நான் கொலை செய்யவில்லை' என்றும் கூறியிருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், சந்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை பிப்ரவரி 19ம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.