கர்நாடகா தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோடுகிறது என்று இயக்குனர் பாரதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பாரதிராஜா அளித்த பேட்டியில், "காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதப்படுத்தாமல் உடனே அமைக்க வேண்டும். காவிரிமேலாண்மை வாரியத்தில் ஸ்கீம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் அதற்கு அனுமதி இல்லை.
ஆனால் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகா சட்டசபை தேர்தலில்தான் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலுக்காகத்தான் காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளி போடுகிறார்கள். ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அதனை புறக்கணித்துவிட்டு கர்நாடகா தேர்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. இதனை பார்க்கும்போது, தமிழக மக்களின் உணர்வோடு பா.ஜ.க. விளையாடுகிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஒரு இயக்குனராக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ் குடிமகனாகத் தான் இதை தெரிவிக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளுக்கு நாள் போராட்டம் நடைபெறும். இதனை மத்திய அரசு எப்படி எதிர்கொள்கிறது என பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.