லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குநர், நடிகை, தொகுப்பாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர். தமிழ் திரைத்துறையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. படங்களில் அவர் நடித்து வந்தாலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குடும்ப நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியது சமூக வலைதளங்களில் மீம்ஸாக, பாடல்களாக மாறின. குறிப்பாக சில வார்த்தைகள் பிரபலமாகின.
இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக அவர் கூறியது போல் தகவல் வெளியானது. அண்மையில் பா.ஜ.கவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். அப்போது அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தகவல் வெளியானது. இந்த தகவல் வைரலாக பரவியது.
இந்நிலையில், இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், “நான் பா.ஜ.கவில் சேரவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும். இதுதான் தற்போதைய பத்திரிகைகளின் தரம். நான் கூறிய தகவலை தவறாக பதிவிட்டுள்ளார்கள்.
இந்த விவாதத்தில் அண்ணாமலை கூறியது சரியே. தங்களுக்கான ஒழுக்கங்களை வளர்த்து கொள்ளாமல் பிறரை கேள்வி கேட்க ஊடகங்களுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று கூறி, அவரைப் பேட்டி எடுத்த செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த நபரை டேக் செய்து அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/