ராஜ ராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பா.ரஞ்சித்துக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 5ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு எதிராக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யமாட்டோம் என்ற போலீசாரின் உத்தரவாதத்தை நீதிபதி நீட்டிக்க மறுத்து விசாரணையை ஜூன் 24க்கு தள்ளி வைத்தார்.அதன்படி இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால், கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குழு இனிவரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என பா. ரஞ்சித்துக்கு அறிவுரை வழங்கியது.
மேலும் சாதிய மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பா. ரஞ்சித் பேசக் கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் கீழமை நீதிமன்றத்தை காவல் துறை அணுகி முன்ஜாமீனை ரத்து செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.