நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்ததாகக் கூறியதால் நா.த.க-வினர் மிரட்டல் விடுப்பதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பேசியதாக கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையானது. மேலும், பெரியார் பேசியதாக சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு சீமான் ஆதாரம் வழங்க வேண்டும், இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.
இதனிடையே, வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்ததாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன். அப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருந்தவர். நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன். அப்படி ஒருமுறை கேசட் கொண்டு வந்து கொடுத்து, சீமான், பிரபாகரன் இருவரும் அருகருகே இருப்பது போல படம் வேண்டும் என்று கேட்டார்.
“நான் எதற்கு என்று கேட்டதற்கு, நாங்கள் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பதற்காக இந்த புகைப்படம் வேண்டும்” என்று சொன்னார். என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அருகருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத்தேன்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல தற்போது கிடைக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது. இது தவிர பிரபாகரனுடன் சீமான் இருப்பதுபோல வேறு புகைப்படம் எதுவும் இணையத்தில் எங்குமே இல்லை. சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா? இல்லை சந்திக்கும்போது புகைப்படம் எடுக்கவில்லையா என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
பிரபாகரன் பெயரையே யாரும் உச்சரிக்காத சூழலில் நான் வந்தபிறகுதான் இங்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் சூழல் உருவானது என சீமான் சொல்கிறார். அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்ற முறையில் நான் சங்கடப்பட்டிருக்கிறேன். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் சொல்லும் நிறைய தகவல்கள் உண்மைக்கு முரணானதாக இருக்கும்” என்று சங்ககிரி ராஜ்குமார் கூறினார்.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் இந்த கருத்துக்கு நா.த.க நிர்வாகிகள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பிரபாகரன் உடன் சீமான் இருக்கும் புகைப்படம் எடிட் செய்ததாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பியபோது, “அதை விடுங்கள்” என்று கடந்து சென்றார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்ததாகக் கூறியதால் நா.த.க-வினர் போன் மூலம் மிரட்டல் விடுப்பதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம்.
கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள்.
அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த பதிவை எழுதவில்லை.
கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள்.
இடையிடையே டேய்..சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள்.
உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை.
உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.
எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள்.
வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது.
உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள், இனியேனும் விட்டு விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.