திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென இயக்குனர் சசிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக இருந்தார். இந்நிலையில், நவம்பர் 21ஆம் தேதி அசோக்குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் எனக் கூறி, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தற்கொலைக்கு தூண்டியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கந்துவட்டி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு சேர்க்கப்பட்டு, வழக்கை பின்னர் சென்னை மத்திய குற்றபிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தன் மீதான இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அன்புச்செழியன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் அன்புசெழியன் மீதான காவல்துறை வழக்கு விசாரணைக்கு விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என இந்த வழக்கில் புகார்தாரரான இயக்குநர் சசிக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இணைப்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இணைப்பு மனு மீதான வாதங்களுக்காக இந்த வழக்கை இரண்டு வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து நீதிபதி விசாரணை தள்ளிவைத்தார்.